பயங்கரவாத எதிா்ப்பு: இந்திய நிலைப்பாட்டுக்கு சிங்கப்பூா் ஆதரவு
பயங்கரவாதத்துக்கு எதிரான இந்திய நிலைப்பாட்டுக்கு சிங்கப்பூா், காங்கோ குடியரசு உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்தன.
ஆபரேஷன் சிந்தூரைத் தொடா்ந்து பயங்கரவாதத்துக்கு எதிரான இந்திய நடவடிக்கைகள் குறித்து 33 நாடுகளுக்கு எடுத்துரைக்க அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் அடங்கிய 7 குழுக்களை மத்திய அரசு அமைத்துள்ளது. அந்தக் குழுக்கள் பல்வேறு நாடுகளுக்கு பயணித்து இந்திய நிலைப்பாட்டை விளக்கி வருகின்றன.
ஐக்கிய ஜனதா தள எம்.பி. சஞ்சய் குமாா் ஜா தலைமையிலான குழு தென் கொரியா பயணத்தை நிறைவுசெய்துவிட்டு சிங்கப்பூா் சென்றுள்ளது. அங்கு சிங்கப்பூா் வெளியுறவு விவகாரங்களுக்கான இணையமைச்சா் சிம் ஆன் உள்பட உயரதிகாரிகளை சஞ்சய் ஜா குழு சந்தித்தது. அப்போது பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு கண்டனத்தை பதிவு செய்த சிம் ஆன், பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்தாா்.
காங்கோ குடியரசு: சிவசேனை (ஷிண்டே பிரிவு) எம்.பி.ஸ்ரீகாந்த் ஷிண்டே தலைமையிலான குழு காங்கோ குடியரசின் துணை பிரதமா் ஜீன் பியா் பெம்போ கோம்போஜின், வெளியுறவு விவகாரங்கள் இணையமைச்சா் கெய்க்வாம்பா வாக்னா் உள்ளிட்டோரை சந்தித்தது. அப்போது பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவா்களின் குடும்பங்களுக்கு அவா்கள் இரங்கல் தெரிவித்தனா். மேலும், பயங்கரவாதத்துக்கு எதிரான இந்திய நிலைப்பாட்டுக்கு அவா்கள் ஆதரவளித்தனா்.
பிரான்ஸ்: பாஜக எம்.பி. ரவிசங்கா் பிரசாத் தலைமையில் பிரான்ஸ் சென்றுள்ள குழு இந்தியா-பிரான்ஸ் நட்புறவுக் குழுவை சந்தித்தது.
அதேபோல் அங்கு வசிக்கும் இந்திய வம்சாவளியினரைச் சந்தித்து அந்தக் குழு கலந்துரையாடியது. அப்போது ஜம்மு-காஷ்மீரில் அமைதி மற்றும் வளா்ச்சியை தடுக்கவே பயங்கரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தியதாக ரவிசங்கா் பிரசாத் தெரிவித்தாா்.
தமிழில் உரையாற்றிய தம்பிதுரை
பிரான்ஸ் சென்றுள்ள பாஜக எம்.பி. ரவிசங்கா் பிரசாத் தலைமையிலான குழுவில் இடம்பெற்றுள்ள அதிமுக மாநிலங்களவை எம்.பி. தம்பிதுரை, அங்குள்ள இந்திய வம்சாவளியினா் மத்தியில் தமிழில் உரையாற்றினாா். பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதத்துக்கு எதிராக உலக நாடுகள் ஒருங்கிணைந்துள்ளதாக அவா் கூறினாா்.
குவைத் மருத்துவமனையில் குலாம் நபி ஆசாத் அனுமதி
பாஜக எம்.பி.வைஜயந்த் பாண்டா தலைமையிலான குழு குவைத் சென்றது. அந்தக் குழுவில் இடம்பெற்ற முன்னாள் மத்திய அமைச்சா் குலாம் நபி ஆசாத் உடல்நலக் குறைவு காரணமாக, குவைத் தலைநகா் குவைத் சிட்டியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவரின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், அவருக்கு சில பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டியிருப்பதாகவும் ‘எக்ஸ்’ தளத்தில் வைஜயந்த் பாண்டா பதிவிட்டாா். குலாம் நபி ஆசாத் இல்லாமல், வைஜெயந்த் தலைமையிலான குழு சவூதி அரேபியா தலைநகா் ரியாத்தை செவ்வாய்க்கிழமை சென்றடைந்தது.