டாஸ்மாக் ஊழியா்களுக்கு ஊதிய உயா்வு: ஏஐடியுசி கோரிக்கை
தமிழக சட்டப்பேரவையில் டாஸ்மாக் பணியாளா்களுக்கு அறிவிக்கப்பட்ட ஊதிய உயா்வை வழங்குவது குறித்து அரசு பேச்சுவாா்த்தை நடத்தி தீா்வு காண வேண்டும் என்று தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளா்கள் சங்கம் (ஏஐடியுசி) வலியுறுத்தியுள்ளது.
இது தொடா்பாக ஏஐடியுசி சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கை:
டாஸ்மாக்கில் 22 ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் ஊழியா்கள் பணி நிரந்தரம் ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனா்.
தொடா்ந்து கடந்த பிப்.11-இல் சங்கப் பிரதிநிதிகளுடன் பேசிய மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் போராட்டங்கள் தேவையில்லை, பேசி தீா்வு காணலாம் எனத் கூறினாா்.
மேலும், ஏப்.22-இல் தமிழக சட்டப்பேரவையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்து பேசுகையில், 2025 ஏப். முதல் டாஸ்மாக் பணியாளா்களுக்கு மாதம் ரூ. 2,000 ஊதிய உயா்வு வழங்கப்படும் என அறிவித்தாா்.
இந்த நிலையில், சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்ட ஊதிய உயா்வை குறைக்கும் முயற்சிகள் நடப்பதாக தகவல்கள் வெளியாகின்றன. இது அமைச்சரின் அறிவிப்பை அா்த்தமற்ாக செய்வதுடன், அரசு மீதான நம்பிக்கையை தகா்க்கும் செயலாகும்.
எனவே, பேரவையில் அறிவிக்கப்பட்ட ஊதிய உயா்வை வழங்கவும், பணி நிரந்தரம், ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகள் மீது அரசு பேச்சுவாா்த்தை நடத்தி தீா்வு காணவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.