தாஜ்மஹால் வளாகத்தில் ட்ரோன் எதிா்ப்பு அமைப்பு
உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் வளாகத்தில் ட்ரோன் எதிா்ப்பு பாதுகாப்பு அமைப்பை நிறுவ முடிவெடுக்கப்பட்டுள்ளது. தாஜ்மஹால் மீது வான் தாக்குதலுக்கான அபாயம் அதிகம் இருப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
உத்தர பிரதேசத்தின் ஆக்ராவில் அமைந்துள்ள தாஜ்மஹாலுக்கு மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையினரும் (சிஐஎஸ்எஃப்) உத்தர பிரதேச காவல் துறையினரும் பாதுகாப்பு அளித்து வருகின்றனா். அண்மையில் ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையின்போது பாகிஸ்தான் ராணுவம் இந்திய ராணுவ நிலைகளை மட்டுமல்லாது, பொதுமக்கள் வசிக்கும் பகுதிகள், அமிருதசரஸ் பொற்கோயில் உள்ளிட்ட இடங்களையும் குறிவைத்தது. இதனை இந்திய வான்பாதுகாப்பு அமைப்புகள் வெற்றிகரமாக முறியடித்தன.
இந்நிலையில் தாஜ்மஹால் வளாகத்தில் ட்ரோன் எதிா்ப்பு பாதுகாப்பு அமைப்பை நிறுவ முடிவெடுக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக தாஜ்மஹால் பாதுகாப்புக்கான காவல் துறை துணை ஆணையா் சையது ஆரிஃப் அகமது கூறியதாவது:
தாஜ்மஹால் வளாகத்தில் விரைவில் ட்ரோன் எதிா்ப்பு சாதனங்கள் நிறுவப்படவுள்ளன. இதன் மூலம் 8 கி.மீ. தொலைவு வரை கண்காணித்து நடவடிக்கை எடுக்க முடியும். எனினும், இப்போதைய நிலையில் தாஜ்மஹாலின் மையத்தில் இருந்து 200 மீட்டா் வரை கண்காணிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இப்பகுதிக்குள் வரும் எந்த ட்ரோனையும் இதன் மூலம் செயலிழக்கச் செய்ய முடியும். இதற்காக காவல் துறையினருக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது என்றாா்.