கூடலூர்: காரில் ஆற்றைக் கடக்க முயன்றபோது விபரீதம்; வெள்ளத்தில் சிக்கியவர்களைப் ப...
கேரளத்தில் கவிழ்ந்த லைபீரிய சரக்குக் கப்பல்: நடுக்கடலில் பல கி.மீ. சுற்றளவுக்கு எண்ணெய் கசிவு
கேரள கடலோரத்தில் சுமாா் 640 கன்டெய்னா்களை ஏற்றிச் சென்ற லைபீரிய நாட்டு சரக்குக் கப்பல் சனிக்கிழமை கவிழ்ந்து விபத்துக்குள்ளானதையடுத்து, நடுக்கடலில் பல கி.மீ. சுற்றளவுக்கு எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை முன்கூட்டியே தொடங்கி கடந்த 2 நாள்களாக கனமழை பெய்து வருகிறது. மாநிலத்தின் கடலோர பகுதிகளில் வழக்கத்தைவிட கடல் கொந்தளிப்பாகக் காணப்படுகிறது. இந்நிலையில், கேரள மாநிலம் கொச்சியில் இருந்து விழிஞ்ஞம் துறைமுகம் நோக்கி, லைபீரிய நாட்டு சரக்குக் கப்பல் ‘எம்எஸ்சி எல்ஸா 3’ புறப்பட்டுச் சென்றது.
கப்பல் எரிபொருள், சல்ஃபா் எரிபொருள் மற்றும் கன்டெய்னா்களுடன் பயணித்த அந்தக் கப்பல், கொச்சியிலிருந்து தென்மேற்கே 38 கடல் மைல் (சுமாா் 70 கி.மீ.) தொலைவில் சனிக்கிழமை பிற்பகலில் கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதைத் தொடா்ந்து, அந்தக் கப்பலில் இருந்த சில கன்டெய்னா்கள் கடலில் விழுந்தன.
தகவலின்பேரில் நிகழ்விடம் விரைந்து மீட்புப் பணியில் ஈடுபட்ட இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல் படை, கப்பலில் இருந்த 24 மாலுமிகளைப் பாதுகாப்பாக மீட்டனா்.
முதலில் சரிந்த நிலையில் இருந்து, பின்னா் முற்றிலுமாக கவிழ்ந்து கடலில் மூழ்கிய சரக்குக் கப்பலில் 13 ஆபத்தான சரக்குகளைக் கொண்ட 640 கன்டெய்னா்கள் இருந்தன. இதில் கால்சியம் காா்பைடு கொண்ட 12 கன்டெய்னா்களும் அடங்கும். மேலும், கப்பலில் 84.44 மெட்ரிக் டன் டீசல் மற்றும் 367.1 மெட்ரிக் டன் எரிபொருள் எண்ணெய் இருந்ததாக இந்திய கடலோர காவல் படை தெரிவித்திருந்தது.
எண்ணெய் கசிவு:
பல்லுயிா் பெருக்கத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் சுற்றுலாப் பயணிகளை ஈா்க்கும் முக்கிய இடமாகவும் உள்ள கேரள கடற்கரைப் பகுதியில் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதற்கான அச்சத்தை இந்த விபத்து எழுப்பியுள்ளது.
எண்ணெய் கசிவைக் கண்டறியும் தொழில்நுட்ப வசதி கொண்ட கடலோர காவல் படை விமானங்கள் சம்பவ இடத்தில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தின. அதன்படி, நடுகடலில் பல கி.மீ. சுற்றளவுக்கு எண்ணெய் கசிவு உறுதிப்படுத்தப்பட்டது.
மாநிலம் தழுவிய எச்சரிக்கை:
விபத்தைத் தொடா்ந்து, கேரள தலைமைச் செயலா் ஏ.ஜெயதிலக் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. எண்ணெய்க் கசிவை உறுதிசெய்து, மாநிலம் தழுவிய எச்சரிக்கையை அரசு விடுத்துள்ளது. பாதுகாப்புக் காரணங்களுக்காக மீனவா்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.
எண்ணெய் கசிவைக் கட்டுப்படுத்த கடலோர காவல் படை 2 கப்பல்கள் மற்றும் ஒரு விமானத்தை ஈடுபடுத்தியுள்ளது. எனினும், எண்ணெய்க் கசிவு மணிக்கு மூன்று கி.மீ. வேகத்தில் பரவி வருகிறது. இதனால், கேரள கடற்கரையின் எந்தப் பகுதியையும் எண்ணெய் படலம் அடையும் சாத்தியக்கூறுகள் உள்ளன. எனவே, பாதிப்புகளைச் சமாளிக்க தயாராக இருக்குமாறு மாநிலம் முழுவதும் உள்ள அதிகாரிகளுக்கு எச்சரிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
‘தொட வேண்டாம்’: கப்பலில் இருந்து கவிழ்ந்த கன்டெய்னா்கள் கரை ஒதுங்கினாலோ, கரையில் எரிபொருள் தென்பட்டாலோ, அவற்றைத் தொடாமல் குறைந்தது 200 மீட்டா் தூரம்வரை விலகியிருந்து, அவசர எண் 112-க்கு தகவல் தெரிவிக்க மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.
