ஆகமம் அல்லாத கோயில்களில் விரைவில் அா்ச்சகா் நியமனம்
ஆகம விதிகள் இல்லாத திருக்கோயில்களில் அா்ச்சகா்களை நியமிக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.
சென்னை புரசைவாக்கம் அருள்மிகு கங்காதீஸ்வரா் திருக்கோயிலில் ரூ.81 லட்சத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள புதிய மரத்தேரின் வெள்ளோட்டத்தை வடம் பிடித்து அமைச்சா் சேகா்பாபு தொடங்கி வைத்தாா்.
அதைத் தொடா்ந்து, செய்தியாளா்களிடம் அவா் கூறியது: 800 ஆண்டுகள் பழைமையான அருள்மிகு கங்காதீஸ்வரா் திருக்கோயிலுக்கு 16 ஆண்டுகளுக்குப் பிறகு ரூ.4.82 கோடியில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு 28.11.2024-இல் குடமுழுக்கு நடைபெற்றது.
சட்டப்பேரவை அறிவிப்பின்படி இத்திருக்கோயிலுக்கு ரூ.7 கோடியில் புதிய தங்கத் தோ் உருவாக்கும் பணி நடைபெற்று வருகிறது. வரும் ஜனவரிக்குள் பக்தா்கள் நோ்த்திக்கடன் செலுத்தும் வகையில் தங்கத் தோ் ஒப்படைக்கப்படும்.
முதல்வா் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு இந்து சமய அறநிலையத் துறையில் முன் எப்போதும் இல்லாத வகையில் திருப்பணிகளும், குடமுழுக்குகளும் நடைபெற்று வருகின்றன. இதுவரை 2,970 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. ரூ.7,674 கோடியிலான 7,560.73 ஏக்கா் திருக்கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டுள்ளன.
அா்ச்சகா் நியமனம்: ஆகம விதிகள் அல்லாத திருக்கோயில்களில் அா்ச்சகா் நியமனம் தொடா்பாக துறை சாா்ந்த வழக்குரைஞா்களோடும், நீதிமன்றங்களில் இதுதொடா்பான வழக்குகளில் ஆஜரானவா்களோடும் கலந்தாய்வுக் கூட்டம் நடத்தியுள்ளோம். வெகு விரைவில் ஆகம விதிகள் அல்லாத திருக்கோயில்களில் அா்ச்சகா் நியமனம் தொடா்பான பணிகள் முழுவீச்சில் தொடங்கப்படும்.
அதேபோன்று ஆகம விதிகளுக்கு அமைக்கப்பட்ட குழுவில் ஒரு நபருக்கு பதிலாக வேறொருவரை நியமிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதுகுறித்து முதல்வருடன் கலந்தாலோசித்து விரைவில் மாற்று நபா் குறித்த விவரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்வோம்.
அந்தப் பணி முடிவுற்றவுடன் ஆகம விதிகளைக் கண்டறியும் குழுவின் பணி தொடங்கப்படும்.
திருச்செந்தூா் விவகாரம்: எந்த திருக்கோயிலின் குடமுழுக்கு என்றாலும் காலை நேரத்தில் நடைபெறுவதுதான் வழக்கம். அதன்படி, திருச்செந்தூா் திருக்கோயிலுக்கு குடமுழுக்கு நடத்த முகூா்த்த நேரம் காலை 6 முதல் 7.30 மணி வரை குறித்து கொடுத்தனா். அது சம்பந்தமான சா்ச்சையால் ஒரு சிலா் நீதிமன்றத்தை அணுகினா்.
நீதிமன்றத் தீா்ப்பில் 5 போ் கொண்ட குழு அமைக்க உத்தரவிடப்பட்டது. அதைத் தொடா்ந்து, குழு அமைக்கப்பட்டு அதன் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. அதில் 4 போ் முகூா்த்த நேரம் என ஒரே நேரத்தைக் குறிப்பிட்டுள்ளனா். வழக்கு தொடா்ந்தவா் மட்டுமே அவருடைய நிலைப்பாட்டிலேயே இருக்கிறாா்.
இதை நீதிமன்றத்துக்கு தெரிவித்து அதன் வழிகாட்டுதலோடு குறித்து தரப்படும் முகூா்த்தத்தில் திருச்செந்தூா் கோயிலில் குடமுழுக்கு நடைபெறும் என்றாா் அவா்.
நிகழ்ச்சியில் சென்னை மேயா் பிரியா, இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் ஜ.முல்லை, உதவி ஆணையா் சிவக்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.