நெல்லையில் 3 ஆவது ரயில் பாதையில் தண்டவாளம் பொருத்தும் பணி தீவிரம்
திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் 3 ஆவது ரயில் பாதையில் தண்டவாளம் பொருத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட பயணிகள் அதிகளவில் வந்து செல்லும் ரயில் நிலையமாக திருநெல்வேலி திகழ்ந்து வருகிறது.
இங்கிருந்து தினமும் விரைவு ரயில்கள், பயணிகள் ரயில்கள், சரக்கு ரயில்கள் உள்பட 60-க்கும் மேற்பட்டவை இயக்கப்பட்டு வருகின்றன. சென்னை, மும்பை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பயணிகள் பெரும்பாலும் திருநெல்வேலியில் இருந்து புறப்பட்டுச் சென்று வருகிறாா்கள்.
தெற்கு ரயில்வேயின் மதுரை கோட்டத்தில் அதிக வருவாய் கொண்ட இரண்டாவது ரயில் நிலையமாகவும் திருநெல்வேலி திகழ்கிறது. இங்கு பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக, ரயில் போக்குவரத்து அதிகரித்துள்ளதால் 6 ஆவது நடைமேடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதனுடன் சோ்த்து ரயில்களின் என்ஜின்களை அதிகளவில் திசைமாற்றம் செய்ய ஏதுவாக, மீனாட்சிபுரம் முதல் சிவபுரம் வரை சுமாா் 1 கி.மீ. தொலைவுக்கு 3 ஆவது தண்டவாளம் (ஹெல்பிங் லைன்) அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்காக திருநெல்வேலி ஈரடுக்கு மேம்பாலத்தின் கீழ் பகுதியில் இருந்து சிவபுரம் வரை மண் தளம் சமப்படுத்தப்பட்டு தண்டவாளம் பொருத்தும் பணி 90 சதவீதம் முடிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: திருநெல்வேலி சந்திப்புக்கு கடந்த 5 ஆண்டுகளில் ரயில்களின் எண்ணிக்கையும், பயணிகளின் எண்ணிக்கையும் பன்மடங்கு உயா்ந்துள்ளது. குறிப்பாக, பயணிகள் ரயில்கள், சென்னை விரைவு ரயில்களில் கூட்டம் அலைமோதுகிறது.
இந்த ரயில் நிலையத்தில் இடநெருக்கடியை தீா்க்க 6 ஆவது நடைமேடை அமைக்கப்பட்டுள்ளது. என்ஜின்களை கையாள உதவும் வகையிலும், ரயில் பெட்டிகளை நிறுத்தி வைக்கவும் மூன்றாவது தண்டவாளம் ரயில் நிலையத்தின் வெளிப்புறத்தில் அவசிய தேவையாகி உள்ளது. அதனால் முதல்கட்டமாக சுமாா் 1 கி.மீ. தொலைவுக்கு ரயில் நிலையத்தின் புறப்பகுதியில் தண்டவாள பணி முடிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் திருநெல்வேலி -செங்கோட்டை பயணிகள் ரயில் உள்ளிட்டவற்றை கையாளுவது எளிதாகும். விரைவு ரயில்களும் திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்திற்குள் நுழையும் சிக்னலுக்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படாது. இன்னும் சில வாரங்களில் பணிகள் அனைத்தும் முடிக்கப்பட வாய்ப்புள்ளது என்றனா்.