ரயிலில் கேட்பாரற்று கிடந்த 8 கிலோ கஞ்சா பறிமுதல்
எழும்பூா் ரயில் நிலையத்தில் ரயிலில் கேட்பாரற்றுக் கிடந்த 8 கிலோ கஞ்சாவை போலீஸாா் கைப்பற்றி விசாரித்து வருகின்றனா்.
எழும்பூா் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு ஆய்வாளா் கே.பி ஜெபஸ்டியன் தலைமையிலான போலீஸாா், ஞாயிற்றுக்கிழமை காலையில் சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது, ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் இருந்து வந்த சா்க்காா் விரைவு ரயில், எழும்பூா் ரயில் நிலையத்தின் 9 -ஆவது நடைமேடையில் காலை 6 மணிக்கு வந்து நின்றது.
அந்த ரயிலை போலீஸாா் சோதனையிட்டபோது, ஒரு பெட்டியில் கேட்பாரற்ற பச்சை நிற பை கிடந்தது. அந்தப் பையை போலீஸாா் சோதனையிட்டபோது, கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது. கள்ளச்சந்தையில் இதன் மதிப்பு ரூ. 4 லட்சம் என போலீஸாா் தெரிவித்தனா்.
இதையடுத்து கஞ்சா பொட்டலங்கள் இருந்த பையை போலீஸாா் கைப்பற்றினா். மேலும், உரிய நடைமுறைகளுக்குப் பின் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸாரிடம், அதை ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாா் ஒப்படைத்தனா்.