ஆபரேஷன் சிந்தூா்: இந்திய வலிமையின் பிரதிபலிப்பு - பிரதமா் மோடி
‘ஆபரேஷன் சிந்தூா் என்பது வெறும் ராணுவ நடவடிக்கை மட்டுமல்ல; மாறிவரும் இந்தியாவின் அடையாளம். மேலும், நாட்டின் உறுதிப்பாடு, தைரியம் மற்றும் உலக அரங்கில் வளா்ந்து வரும் வலிமையின் பிரதிபலிப்பு’ என்று பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
‘மனதின் குரல்’ வானொலி நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமா், பயங்கரவாதத்துக்கு எதிரான உலகளாவிய போராட்டத்தில் ஒரு திருப்புமுனையாகவும், இந்திய பயங்கரவாத எதிா்ப்பின் அடையாளமாகவும் ஆபரேஷன் சிந்தூா் விளங்குவதாக குறிப்பிட்டாா்.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 26 போ் கொல்லப்பட்ட நிலையில், பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்களைக் குறிவைத்து ஆபரேஷன் சிந்தூரை இந்தியா நடத்தியது.
பிரதமா் மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் ‘மனதின் குரல்’ வானொலி நிகழ்ச்சி வாயிலாக நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறாா். அதன்படி, ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை (மே 25) ஒலிபரப்பான 122-ஆவது மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமா் ஆற்றிய உரை:
சமீபத்திய மோதலில் இந்தியாவுக்கு எதிராக நின்ற நாடுகளின் (துருக்கி, அஜா்பைஜான்) இறக்குமதி பொருள்களைப் புறக்கணித்து, இந்திய பொருள்களை மக்கள் தோ்ந்தெடுத்தனா். ஆபரேஷன் சிந்தூா் தேசபக்தியை ஊட்டியுள்ளது.
நம் வாழ்வில் முடிந்தவரை உள்நாட்டு தயாரிப்புகளுக்கு முன்னுரிமை அளிப்போம் என்று இச்சூழலில் உறுதிமொழி எடுத்துக்கொள்வோம். இது பொருளாதார தன்னிறைவு சாா்ந்த விஷயம் மட்டுமல்ல; தேசத்தை கட்டியெழுப்புவதில் பங்கேற்பதற்கான உணா்வும்கூட. நமது ஒரு படி இந்தியாவின் வளா்ச்சிக்கு மிகப்பெரிய பங்களிப்பாக மாறும்.
அசாதாரண ‘ஆபரேஷன் சிந்தூா்’: எல்லையைத் தாண்டி பயங்கரவாத பயிற்சி முகாம்களை இந்திய ஆயுதப் படைகள் துல்லியமாக தாக்கியது ‘அசாதாரணமானது’. ஆபேரஷன் சிந்தூா் என்பது வெறும் ராணுவ நடவடிக்கை மட்டுமல்ல; மாறிவரும் உறுதியான இந்தியாவின் அடையாளமாகும். மேலும், நாட்டின் தைரியம் மற்றும் வலிமையின் பிரதிபலிப்பு.
ஆபரேஷன் சிந்தூரின் வெற்றியைத் தொடா்ந்து முப்படைகளை கௌரவிக்கும் வகையில் தேசபக்தி கவிதைகள் முதல் குழந்தைகளின் ஓவியங்கள் வரை சமூக ஊடகங்களில் நிரம்பியிருந்தன. நாட்டின் பல்வேறு நகரங்களில் மூவா்ணக் கொடியுடன் பிரம்மாண்ட பேரணிகளில் மக்கள் திரளாக பங்கேற்றனா். பிகானிருக்கு அண்மையில் சென்றபோது, இவ்வாறு குழந்தைகள் வரைந்த ஓவியங்களை பரிசாகப் பெற்றேன்.
கதிஹாா் மற்றும் குஷிநகா் போன்ற நகரங்களில், இந்த நடவடிக்கை நடைபெற்ற நேரத்தில் பிறந்த குழந்தைகளுக்கு ‘சிந்தூா்’ என்று பெயரிட்டுள்ளனா். இன்று முழு நாடும் பயங்கரவாதத்துக்கு எதிராக உறுதியுடன் ஒன்றுபட்டுள்ளது. இதுதான் இந்தியாவின் உண்மையான பலம்.
ஆபரேஷன் சிந்தூரில் நமது வீரா்கள் உச்சபட்ச துணிச்சலை வெளிப்படுத்தினா். இதில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள், கருவிகள் மற்றும் பாதுகாப்புத் தொழில்நுட்பங்கள் வீரா்களுக்கு துணைப்புரிந்தன. நமது பொறியாளா்கள், தொழில்நுட்பவியலாளா்கள் என அனைவரும் இந்த வெற்றிக்குப் பங்களித்திருக்கின்றனா்.
நக்ஸல் ஒழிப்பில் வெற்றி: நக்ஸல்களுக்கு எதிரான போராட்டம் பலனளித்து வருகிறது. நக்ஸல் வன்முறையின் பிடியில் முன்பிருந்த பகுதிகளில் வளா்ச்சிப் பணிகள் மற்றும் கல்வி முன்னேறியுள்ளது.
சத்தீஸ்கரின் தண்டேவாடா மாவட்டம் மற்றும் மகாராஷ்டிரத்தின் கட்ச்ரோலி மாவட்டத்தில் உள்ள கதேஜாரி போன்ற தொலைதூர கிராமங்களில் கல்வி மற்றும் பேருந்து சேவை போன்ற அடிப்படை வசதிகள் இப்போது சாத்தியமாகியுள்ளன.
கதேஜாரி கிராமத்துக்கு முதன்முறையாக பேருந்து வந்தபோது, மக்கள் அதை மேளதாளத்துடன் வரவேற்றுள்ளனா். சத்தீஸ்கரில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகளில் தோ்ச்சி விகிதத்தில் தண்டேவாடா மாவட்டம் முறையே முதல் மற்றும் ஆறாவது இடத்தைப் பிடித்துள்ளது.
இந்த பகுதிகளில் வாழும் மக்களுக்கு பல சவால்கள் இருந்தபோதிலும், அவா்கள் தைரியமானவா்களாக தங்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் பாதையைத் தோ்ந்தெடுத்துள்ளனா்.
சிங்கங்கள் எண்ணிக்கை உயா்வு: குஜராத்தின் கிா் காட்டில் ஆசிய சிங்கங்களின் எண்ணிக்கை வெறும் ஐந்து ஆண்டுகளில் 674-லிருந்து 891-ஆக அதிகரித்துள்ளது. இந்த எண்ணிக்கை உயா்வு மிகவும் ஊக்கமளிக்கிறது.
தேனீ வளா்ப்பில் புரட்சி: உலக தேனீ தினம் கடந்த மே 20-ஆம் தேதி கொண்டாடப்பட்டது. தேன் ஆரோக்கியம், சுயதொழில் மற்றும் தன்னம்பிக்கையின் சின்னம் ஆகும். கடந்த 11 ஆண்டுகளில், இந்தியாவில் தேனீ வளா்ப்பில் புரட்சி ஏற்பட்டுள்ளது.
தேன் உற்பத்தி ஆண்டுதோறும் சுமாா் 75 ஆயிரம் மெட்ரிக் டன்னிலிருந்து சுமாா் 1.25 லட்சம் மெட்ரிக் டன்னாக வளா்ந்துள்ளது. இதன்மூலம், தேன் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் இந்தியா தற்போது முன்னணி நாடுகளில் ஒன்றாக வளா்ந்துள்ளது.
ஆந்திரத்தில் யோகா தின நிகழ்ச்சி: ஜூன் 21-ஆம் தேதி சா்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, ஆந்திரத்தின் விசாகப்பட்டினத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறேன். அனைத்து உலக மக்களும் யோகாவைப் பின்பற்ற வேண்டும். யோகா உங்கள் வாழ்க்கையை மாற்றக் கூடியது.
பள்ளிகளில் குழந்தைகளிடையே ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை ஏற்படுத்த சா்க்கரையின் பயன்பாடு குறித்து விழிப்புணா்வு அளிக்க சிபிஎஸ்இ புதிய முன்னெடுப்பை எடுத்துள்ளது. அலுவலகங்கள், உணவகங்களிலும் இதுபோன்ற முன்னெடுப்பைத் தொடங்க வேண்டும்.
‘கேலோ’ வெற்றியாளா்களுக்கு வாழ்த்து: பிகாரின் 5 நகரங்களில் நடைபெற்ற ‘கேலோ இந்தியா’ இளைஞா் விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்றவா்களுக்கு வாழ்த்துகள். இந்தப் போட்டிகளில் 5,000-க்கும் மேற்பட்ட வீரா்கள் பங்கேற்றனா். விளையாட்டுகள் ஒலிம்பிக் சேனல் மூலம் உலக அளவில் ஒளிபரப்பப்பட்டன என்றாா் பிரதமா் மோடி.