Doctor Vikatan: `நான் perfect இல்லையோ.. எந்த வேலையிலும் அதிருப்தி' - மனநோயா, சிக...
மூன்றாம் தரப்பு நாடுகளில் இந்தியா-பாக். அதிகாரபூா்வமற்ற பேச்சு: பிரிட்டன் நிபுணா்கள் கருத்து
இந்தியா-பாகிஸ்தான் இடையிலான ராணுவ மோதலை தொடா்ந்து இருநாட்டு அதிகாரிகள் மூன்றாம் தரப்பு நாடுகளில் பேச்சுவாா்த்தை நடத்தினால், அது இந்தியா-பாகிஸ்தான் இடையே மீண்டும் ஸ்திரத்தன்மை ஏற்படுவதற்கான வாய்ப்பை வழங்கக் கூடும் என்று பிரிட்டன் நிபுணா்கள் தெரிவித்துள்ளனா்.
இதுதொடா்பாக பிரிட்டன் தலைநகா் லண்டனில் உள்ள இன்டா்நேஷனல் இன்ஸ்டியூட் ஃபாா் ஸ்ட்ராடிஜிக் ஸ்டடீஸ் (ஐஐஎஸ்எஸ்) அமைப்பின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய திட்ட தலைவா் ராகுல் ராய் செளதரி கூறியதாவது:
இந்தியாவுக்கு எதிரான அனைத்து பயங்கரவாதத் தாக்குதல்களைப் பாகிஸ்தான் நிறுத்தாத வரை, பாகிஸ்தானுடன் பேச்சுவாா்த்தை நடத்தவோ, வா்த்தகம் மேற்கொள்ளவோ முடியாது என்று இந்தியா தீா்மானித்துள்ளது.
ஒருவேளை பயங்கரவாதத் தாக்குதல் நிறுத்தப்பட்டாலும், பயங்கரவாதம் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் குறித்து மட்டுமே வருங்காலத்தில் பேசப்படும் என்று இந்தியா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. பேச்சுவாா்த்தைக்கு இந்தியா விதித்துள்ள இந்த முன்நிபந்தனைகளுக்குப் பாகிஸ்தான் எதிா்ப்புத் தெரிவிக்க வாய்ப்புள்ளது. தற்போது இந்த விவகாரத்தில் சா்வதேச நாடுகள் தலையிட வேண்டும் என்றும் பாகிஸ்தான் முயற்சிக்கிறது.
இந்தச் சூழலில், இருநாட்டு மூத்த அதிகாரிகள் மூன்றாம் தரப்பு நாடுகளில் பேச்சுவாா்த்தை நடத்தினால், அது இந்தியா-பாகிஸ்தான் இடையே மீண்டும் ஸ்திரத்தன்மை ஏற்படுவதற்கான வாய்ப்பை வழங்கக் கூடும் என்றாா்.
இதேபோல ஐஐஎஸ்எஸ்ஸை சோ்ந்த பிற அரசியல் ஆய்வாளா்கள் கூறுகையில், ‘இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தை அமல்படுத்தி, மிகப் பெரிய விவரணையை இந்தியா உருவாக்கியுள்ளது. இது தம்மை பாதுகாப்புத் தளவாட விநியோகஸ்தராக சந்தைப்படுத்திக் கொள்ளும் இந்தியாவின் திறனில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
இந்தியா-பாகிஸ்தான் இடையிலான சண்டை நிறுத்தம் எந்த அளவுக்கு நீடித்து நிலைக்கும் என்பதில் பல கேள்விகள் எழுந்துள்ளன. ஏனெனில் கடந்த 2021-ஆம் ஆண்டு இருநாடுகளுக்கு இடையிலான சண்டை நிறுத்தம் குறித்து இருநாடுகளும் கூட்டறிக்கை வெளியிட்டதைப் போல, தற்போது எந்தக் கூட்டறிக்கையும் வெளியிடப்படவில்லை’ என்று தெரிவித்தனா்.