உக்ரைன் - ரஷியா இடையே இன்று 303 கைதிகள் பரிமாற்றம்!
உக்ரைன் - ரஷியா நாடுகளுக்கிடையே 303 போர்க் கைதிகள் இன்று ஞாயிற்றுக்கிழமை (மே 25) பரிமாற்றம் செய்யப்பட்டதாக ரஷிய பாதுகாப்புத் துறை அறிவித்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை 390 கைதிகளும், சனிக்கிழமை 307 கைதிகளும் பரஸ்பரமாக ஒப்படைக்கப்பட்ட நிலையில், இன்று 303 கைதிகளை இரு நாடுகளும் பரிமாற்றம் செய்துகொண்டன.
உக்ரைன் - ரஷியா இடையே கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாகப் போர் நடைபெற்று வரும் நிலையில், துருக்கியில் கடந்த வாரம் இரு நாட்டு பிரதிநிதிகள் இடையே நடந்த பேச்சுவார்த்தையில், கைதிகளை பரிமாற்றம் செய்துகொள்ள ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, இரு நாடுகளும் போரின்போது பிணைக்கைதிகளாக தாங்கள் சிறைப்பிடித்துச் சென்ற வீரர்கள் மற்றும் குடிமக்களை ஒப்படைத்து வருகின்றன.
போர்க் கைதிகள் ஒப்படைக்கப்பட்டு வந்தாலும், இரு நாடுகளும் தொடர்ந்து தாக்குதலிலும் ஈடுபட்டு வருகின்றன. இன்று 303 கைதிகள் ஒப்படைக்கப்பட்டிருந்தாலும், உக்ரைன் தலைநகரின் கீவ் நகரைக் குறிவைத்து ட்ரோன்கள் மூலம் ரஷியா தாக்குதல் நடத்தியது. இதில் உக்ரைனைச் சேர்ந்த 13 பேர் கொல்லப்பட்டனர்.
நேற்று இரவு முதல் மட்டும், 367 ட்ரோன்களை ஏவி, ரஷியா தாக்குதல் நடத்தியுள்ளது. கடந்த மூன்றரை ஆண்டுகாலப் போரில் ஒரே நாளில் அதிக ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது இதுவே முதல்முறை என உக்ரைன் விமானப் படை செய்தித்தொடர்பாளர் யூரி இஹ்னாட் தெரிவித்துள்ளார். இதோடுமட்டுமின்றி 69 ஏவுகணைகளை வீசி ரஷியா தாக்குதலில் ஈடுபட்டுள்ளது என்றார்.
இது குறித்துப் பேசிய உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸ்கி, ரஷியாவின் ஏவுகணைகளும் ட்ரோன்களும் உக்ரைனின் 30க்கும் மேற்பட்ட நகரங்களைத் தாக்கியுள்ளதாகவும், ரஷியா மீதான பொருளாதாரத் தடைகளை மேற்கத்திய நாடுகள் அதிகரிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
இதையும் படிக்க | பாகிஸ்தானில் மர்ம நபர்களால் பத்திரிகையாளர் சுட்டுக்கொலை