உக்ரைன் மீது ரஷிய தாக்குதல்கள்: 12 பேர் பலி
உக்ரைன் முழுவதும் ஒரே இரவில் ரஷிய நிகழ்த்திய டிரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களில் 12 பேர் பலியாகினர்.
கிவ்வின் மேற்கே உள்ள சைட்டோமைரில் மூன்று குழந்தைகளும், தெற்கு நகரமான மைகோலைவில் 70 வயதுடைய ஒருவரும் கொல்லப்பட்டதாக மாநில அவசர சேவை தெரிவித்துள்ளது. இரு நாடுகளுக்கிடையே ஒரு பெரிய போர்க்கைதி பரிமாற்றம் நடந்தநிலையில் இந்த தாக்குதல்கள் நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் சனிக்கிழமை ரஷியாவின் 45 குரூஸ் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தியதாகவும், 266 ஆளில்லா வான்வழி வாகனங்களை செயலிழக்கச் செய்ததாகவும் உக்ரைனின் விமானப்படை தெரிவித்துள்ளது. இதனிடையே சனிக்கிழமை இரவு நான்கு மணி நேர இடைவெளியில் மாஸ்கோ உள்பட பல ரஷிய பகுதிகளில் 95 உக்ரைன் ட்ரோன்களை வான் பாதுகாப்புப் பிரிவுகள் சுட்டு வீழ்த்தியதாக ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இருப்பினும் இதில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த 2022 பிப்ரவரி மாதம் படையெடுத்து, டொனட்ஸ்க், லுஹான்ஸ்க், ஸபோரிஷியா, கொ்சான் ஆகிய கிழக்கு மாகாணங்களின் கணிசமான பகுதிகளைக் கைப்பற்றியது.
குறுகிய காலத்தில் நிறைவடைந்த புன்னகைப் பூவே தொடர்!
ரஷியாவிடம் இழந்த பகுதிகளை மீட்பதற்காக உக்ரைனும், கிழக்கு மாகாணங்களில் இன்னும் உக்ரைன் படையினா் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளைக் கைப்பற்றுவதற்காக ரஷியாவும் தொடா்ந்து சண்டையிட்டுவருகின்றன. இதனால் இரு தரப்பிலும் உயிரிழப்புகள் தொடா்ந்துவருகின்றன.
இதன் தொடர்ச்சியாக, மே 15 ஆம் தேதியில் துருக்கியில் ரஷியா - உக்ரைன் நாட்டு பிரதிநிதிகள் முதன்முறையாக நேரடி பேச்சுவார்த்தையில் அண்மையில் ஈடுபட்டனர். இந்தப் பேச்சுவார்த்தையில், போர்க்கைதிகள் பரிமாற்றம் தவிர்த்து, மற்ற கோரிக்கைகள் எதுவும் எட்டப்படாததால், பேச்சுவார்த்தை தோல்வியைத் தழுவியது.