மேட்டூா் காவிரியில் ஆயிரக்கணக்கில் இறந்து மிதக்கும் மீன்கள்!
Pahalgam attack: ``பெண்களிடம் வீரம் இல்லை..'' - பாதிக்கப்பட்ட பெண்களை விமர்சித்த பாஜக எம்.பி
கடந்த மாதம் ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்ட பெண்களை விமர்சிக்கும் விதமாக பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
சில நாட்களுக்கு முன்னர்தான் மத்தியபிரதேசம் மாநில பாஜக அமைச்சர் விஜய் ஷா, ராணுவ அதிகாரி சோஃபியா குரேஷி குறித்து அவதூறாக பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், ஹரியானாவைச் சேர்ந்த ராஜ்யசபா எம்.பி ராம் சந்தர் ஜங்ரா, சுற்றுலாப் பயணிகள் எதிர்த்துப் போராடியிருக்க வேண்டுமென்றும், அவர்கள் அக்னிவீர் பயிற்சி (மத்திய அரசின் ராணுவ ஆட்சேர்ப்பு திட்டம்) பெற்றிருந்தால் வெற்றி பெற்றிருக்கக் கூடும் என்றும் பேசியுள்ளார்.
பஹல்காம் தாக்குதலில் 25 சுற்றுலாப் பயணிகளுடன், பயணிகளைக் காப்பாற்றுவதற்காக தீவிரவாதியின் துப்பாக்கியைப் பிடுங்க முயன்ற உள்ளூர் வாசியும் கொல்லப்பட்டார்.
தீவிரவாதிகள் தாக்குதலில் ஆண்களை மட்டுமே குறிவைத்து கொலை செய்தனர். அத்துடன் பெண்கள் தங்கள் உயிருக்காக மன்றாடுவதையும், அலறுவதையும் பின்னர் வெளியான வீடியோக்களில் பார்க்க முடிந்தது.

"போர்வீரர் மனப்பான்மையும் வைராக்கியமும் இல்லை"
ஹரியானாவின் பிவானியில் மராட்டிய ராணியான அஹில்யாபாய் ஹோல்கரின் 300 -வது பிறந்தநாளைக் கொண்டாடும் நிகழ்வில் பேசிய ராஜ்யசபா எம்பி ராம் சந்தர் ஜங்ரா, "பஹல்காமில் தங்கள் கணவர்களை இழந்த பெண்களுக்கு போர்வீரர் மனப்பான்மையும் எழுச்சியும் வைராக்கியமும் இல்லை. அதனால்தான் தாக்குதலுக்கு பலியானார்கள்" எனப் பேசியுள்ளார்.
"கைகளை மடக்கி வைத்திருப்பதால் யாரையும் பயங்கரவாதிகள் விட்டுவைப்பதில்லை. நம் மக்கள் கை மடங்கியபடியே சுட்டுக்கொல்லப்பட்டனர்." எனப் பேசியுள்ளார்.
மேலும் அக்னிவீர் திட்டத்தை முன்வைக்கும் விதமாக, "சுற்றுலாப்பயணிகள் அக்னிவீர் திட்டத்தில் பயிற்சி பெற்றிருந்தால் 3 தீவிரவாதிகள் 26 பேரை சுட்டுக்கொன்றிருக்க முடியாது. அவர்கள் சண்டையிட்டிருந்தால் உயிரிழப்புகள் குறைவாக இருந்திருக்கும்" எனக் கூறியுள்ளார்.

மேலும் பெண்கள் சண்டையிட்டிருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக, "அகிலியாபாய் ஹோல்கர் ஒரு பெண், ராணி லட்சுமிபாயும் பெண்தான், அவர்கள் சண்டையிடவில்லையா? நம் சகோதரிகள் தைரியமாகவும் துணிச்சலுடனும் வாழ வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்." எனப் பேசியிருக்கிறார்.
`வெட்கக்கேடான பேச்சு!'
எம்.பி ராம் சந்தரின் பேச்சு வெட்கக்கேடானது எனக் கண்டித்துள்ளார் காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ். மேலும் பாஜகவினர் தொடர்ந்து இந்திய ராணுவத்தையும் தியாகிகளையும் அவமதித்து வருவதாக விமர்சித்துள்ளார்.
ராஜ்யசபா எம்.பியின் வீடியோவைப் பகிர்ந்து,"பாஜக தலைவர்கள் இந்திய ராணுவத்தையும், தியாகிகளையும் தொடர்ந்து அவமதித்து வருவது, அவர்களின் அற்பமான மற்றும் தாழ்ந்த மனநிலையை அம்பலப்படுத்துகிறது." எனக் கூறியுள்ளார்.

மேலும், "ராஜ்யசபா எம்.பியின் இந்த வெட்கக்கேடான கூற்று, அதிகார போதையில் இருக்கும் பாஜகவினர், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்தவர்களின் தியாகத்திற்கு பாதுகாப்பு குறைபாட்டைக் குறை கூறுவதற்குப் பதிலாக, தியாகிகள் மற்றும் அவர்களது மனைவிகள் மீது கேள்விகளை எழுப்பும் அளவுக்கு உணர்ச்சியற்றவர்களாக மாறிவிட்டதைக் காட்டுகிறது." என்றும் எழுதியுள்ளார்.
நடவடிக்கை எடுக்காதது ஏன்?
அத்துடன் விஜய் ஷா, தேவ்தா உள்ளிட்ட ராணுவ வீரர்கள் பற்றி அவதூறாக பேசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாததைச் சுட்டிக்காட்டி, "பிரதமர் மோடி மற்றும் பாஜக தலைமையின் மௌனம், இவர்களின் கூற்றுகளை ஏற்றுக்கொள்வதாக ஏன் கருதக்கூடாது?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த பேச்சுக்காக பிரதமர் மோடி மன்னிப்புக் கேட்கவேண்டும் என்றும் ராஜ்யசப எம்.பியை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்றும் வலியுறித்தியுள்ளார்.
பிற காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி தலைவர்களும் பாஜக எம்.பியின் பேச்சைக் கண்டித்துள்ளனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs