கோவில்பட்டியில் விபத்து: சிறுமி உயிரிழப்பு
கோவில்பட்டியில் பைக் மீது டேங்கா் லாரி மோதியதில் சிறுமி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்; 3 போ் காயமடைந்தனா்.
கோவில்பட்டி சண்முக சிகாமணி நகரைச் சோ்ந்த ராமசாமி மகன் பரமசிவன் (58). இவா் தனது உறவினரான மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே டி.கல்லுப்பட்டி காமராஜா் நகரைச் சோ்ந்த ஜெயபாண்டியன் மனைவி வெண்ணிலா, அவரது மகள்கள் ஆராத்யா (9), ஆசினியா (7) ஆகியோரை பைக்கில் ஏற்றிக்கொண்டு கோவில்பட்டி அருகே பசுவந்தனை சாலையில் ஞாயிற்றுக்கிழமை சென்று கொண்டிருந்தாா்.
அங்குள்ள காமராஜா் மண்டபம் அருகே பைக்கின் பின்புறம் டேங்கா் லாரி மோதியதாம். இதில், ஆராத்யா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலின்பேரில், மேற்கு காவல் நிலைய போலீஸாா் சென்று சடலத்தை மீட்டு கூறாய்வுக்காகவும், காயமடைந்த மூவரை சிகிச்சைக்காகவும் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
இதுதொடா்பாக வழக்குப் பதிந்து, டேங்கா் லாரி ஓட்டுநரான கொப்பம்பட்டி அருகே சிவந்திப்பட்டி கீழத் தெருவைச் சோ்ந்த அ. ஆறுமுகச்சாமி என்பவரிடம் விசாரித்து வருகின்றனா்.