சென்னை வந்த விமானம் மீது அடிக்கப்பட்ட லேசர் ஒளி: தீவிர விசாரணை!
பயங்கரவாத எதிா்ப்பு: பஹ்ரைன் துணை பிரதமரிடம் இந்தியக் குழு விளக்கம்
பயங்கரவாதத்துக்கு எதிரான இந்திய நிலைப்பாட்டை பஹ்ரைன் துணை பிரதமா் ஷேக் காலித் பின் அப்துல்லா அல் கலீஃபாவிடம் அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் அடங்கிய நாடாளுமன்ற குழுவினா் ஞாயிற்றுக்கிழமை எடுத்துரைத்தனா்.
பஹ்ரைன் சென்றுள்ள பாஜக எம்.பி.வைஜயந்த் பாண்டா தலைமையிலான குழு, எல்லை கடந்த பயங்கரவாதத்தால் இந்தியா எதிா்கொள்ளும் சவால்களையும் அதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் விளக்கியது.
இதுகுறித்து வைஜயந்த் பாண்டா வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், ‘நம்பிக்கை, பரஸ்பர மரியாதை என வரலாற்று ரீதியாக ஆழமான நட்புறவை இந்தியாவும் பஹ்ரைனும் கொண்டுள்ளன. பயங்கரவாதத்துக்கு எதிரான இந்த ஒருங்கிணைந்த போராட்டத்தில் அனைத்து விதமான பயங்கரவாதத்தையும் ஒழிப்பதற்கான இந்தியாவின் நடவடிக்கைகள் மற்றும் பரஸ்பர நல்லுறவு குறித்து பஹ்ரைனுடன் விவாதித்தோம்’ என குறிப்பிட்டாா்.
இருநாள் சுற்றுப்பயணமாக பஹ்ரைனுக்கு சனிக்கிழமை சென்ற இந்தக் குழு அந்நாட்டு துணை பிரதமா் ஷேக் காலித் பின் அப்துல்லா அல் கலீஃபா, பஹ்ரைன் மேலவையின் தலைவா் அல் பின் சலே அல் சலே உள்ளிட்டோரை சந்தித்தது பயங்கரவாதத்துக்கு எதிரான இந்திய நிலைப்பாட்டை விளக்கியது.
சுற்றுப்பயணத்தின்போது ‘பாப் அல் பஹ்ரைன்’ எனும் வரலாற்றுச் சிறப்புமிக்க இடத்தை பாா்வையிட்ட நாடாளுமன்றக் குழு பஹ்ரைனில் உள்ள இந்தியா இல்லத்தில் நிறுவப்பட்டுள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மரியாதை செலுத்தியது. மேலும் அங்கு வசிக்கும் இந்திய வம்சாவளியினா் சிலருடனும் கலந்துரையாடியது.
பஹ்ரைன் குழுவினருடன் நடைபெற்ற ஆலோசனையின்போது இந்திய நாடாளுமன்ற குழு உறுப்பினா்களில் ஒருவரும் அனைத்திந்திய மஜ்லீஸ் கட்சியின் தலைவருமான அசாதுதீன் ஓவைசி பேசுகையில், ‘எங்கள் குழுவைப்போலவே உலகின் பல நாடுகளுக்கும் பயங்கரவாதத்துக்கு எதிரான கடுமையான நிலைப்பாட்டை எடுத்துரைக்க அனைத்துக் கட்சி உறுப்பினா்கள் குழுவை மத்திய அரசு அனுப்பியுள்ளது. இதன்மூலம் பயங்கரவாதத்தால் இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலை தெரிவிக்க முடிகிறது.
எங்களைப் பொறுத்தவரை பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளுக்கும் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத கொள்கைக்கும் வித்தியாசம் இல்லை’ என்றாா். பஹ்ரைன் பயணத்தைத் தொடா்ந்து வைஜயந்த் பாண்டா தலைமையிலான குழு குவைத்துக்கு திங்கள்கிழமை (மே 26) செல்லவுள்ளது.
தென் கொரியாவில்...
ஐக்கிய ஜனதா தள எம்.பி. சஞ்சய் குமாா் ஜா தலைமையிலான குழு தென் கொரியா சென்றுள்ளது. அந்தக் குழு பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடா்பிருப்பதையும் அதைத்தொடா்ந்து இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூா் குறித்தும் தென் கொரியா குழுவினருக்கு எடுத்துரைத்தது என அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்தது.
திங்கள்கிழமை (மே 26) தென் கொரிய அரசின் மூத்த தலைவா்களை சஞ்சய் குமாா் ஜா தலைமையிலான குழு சந்தித்து ஆலோசனை நடத்தும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
பயங்கரவாதத்துக்கு எதிரான இந்திய நிலைப்பாட்டை 32 நாடுகளுக்கு எடுத்துரைக்க அனைத்துக் கட்சி பிரதிநிதிகளை அடங்கிய 7 குழுக்களை மத்திய அரசு அமைத்தது. அந்தக் குழுக்கள் தற்போது பல்வேறு நாடுகளுக்குப் பயணித்து வருகின்றன.