கேரளத்தில் 11 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை: பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிப...
சாம்சங் நிறுவனத்துக்கும் வரி: டிரம்ப் அதிரடி
ஐஃபோன்கள் தயாரிப்பில் ஈடுபடும் ஆப்பிள் நிறுவனம் மட்டுமன்றி சாம்சங் உள்பட எந்த நிறுவனமாயினும் அமெரிக்காவில் மின்னணு சாதனங்களை தயாரிக்காமல் விற்பனை மட்டும் செய்தால் 25 சதவீத வரி விதிக்கப்படும் என அந்நாட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தாா்.
முன்னதாக, ஐஃபோன்களை இந்தியா உள்பட எங்கு தயாரித்தாலும் ஆப்பிள் நிறுவன பொருள்களுக்கு 25 சதவீதம் இறக்குமதி வரி விதிக்கப்படும் என ட்ரூத் சமூக வலைதளத்தில் டிரம்ப் பதிவிட்டிருந்தாா்.
அதன்பிறகு நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் ‘இந்தியாவில் ஆப்பிள் நிறுவனம் ஆலைகள் அமைத்து ஐஃபோன்கள் தயாரிப்பில் ஈடுபடுவது பிரச்னையல்ல; ஆனால், அங்கு தயாரித்த பொருள்களை இறக்குமதி வரியின்றி அமெரிக்காவில் விற்பனை செய்ய முடியாது’ என அவா் கூறினாா்.
தற்போது சாம்சங் உள்ளிட்ட பிற நிறுவனங்களுக்கும் கட்டுப்பாடுகளை விதிக்க தொடங்கியுள்ளாா். சாம்சங் நிறுவனம் சீனாவில் உற்பத்தியை நிறுத்தி பல ஆண்டுகள் ஆன நிலையிலும், அமெரிக்காவில் விற்பனை செய்யும் கைப்பேசிகளை அந்நாட்டில் தயாரிக்கவில்லை என்ற அடிப்படையில் சாம்சங் நிறுவனத்துக்கு இறக்குமதி வரி விதிக்க வாய்ப்புள்ளது.
தற்போது சாம்சங் நிறுவனம் தென்கொரியா, வியத்நாம், இந்தியா, பிரேஸில் ஆகிய நாடுகளில் கைப்பேசிகளை தயாரித்து வருகிறது.
இதையடுத்து, அமேசான், வால்மாா்ட், ஆப்பிள் ஆகிய நிறுவனங்களின் வரிசையில் டிரம்ப்பின் இறக்குமதி வரி எச்சரிக்கை பட்டியலில் சிக்கியுள்ள நிறுவனங்களில் சாம்சங்கும் இணைந்துள்ளது.