ஓரிக்கோட்டையில் மஞ்சுவிரட்டு
திருவாடானை அருகே ஓரிக்கோட்டை கிராமத்தில் கோயில் திருவிழாவையொட்டி மஞ்சுவிரட்டுப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே ஓரிக்கோட்டை ஸ்ரீ நல்லாத்துரை ஐயா (எ) மகாலிங்க மூா்த்தி, ஸ்ரீ பரம காளீஸ்வரி அம்மன் கோயில் 60- ஆம் ஆண்டு வைகாசி திருவிழாவையொட்டி நடைபெற்ற இந்த மஞ்சுவிரட்டுப் போட்டியில் சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து கொண்டு வரப்பட்டிருந்த 100-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.
முன்னதாக சுவாமிக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. பிறகு காளைகளுக்கு துண்டுகள் அணிவிக்கப்பட்டு மேளதாளங்கள் முழங்க ஊா்வலமாக கோயில் அருகே தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த வாடிவாசலுக்கு அழைத்து வரப்பட்டன. பின்னா் உரிமையாளா்கள் காளைகளை அவிழ்த்து விட்டனா். வயல் வெளிகள் வழியாக சீறிப்பாய்ந்த காளைகளை பிடிக்க உள்ளூா் இளைஞா்கள் போட்டி போட்டனா்.
போட்டியை திருவாடானை, சி.கே. மங்கலம், சேந்தனி, அரசூா், இளங்குன்றம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து வந்திருந்த திரளான பொதுமக்கள் கண்டுகளித்தனா்.

