கேரளத்தில் 11 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை: பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிப...
முதுகுளத்தூா் அருகே தரமற்ற சாலை: பொதுமக்கள் புகாா்
முதுகுளத்தூா் அருகே புதிதாக அமைக்கப்பட்ட சாலை தரமற்று இருப்பதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகே உள்ள மேலக்கொடுமலூரிலிருந்து கிருஷ்ணாபுரம் வழியாக கோனேரியேந்தல் கிராமத்துக்குச் செல்லும் 3 கி.மீ. தொலைவு சாலை ரூ. ஒரு கோடியே 96 லட்சத்து 78 ஆயிரத்தில் அமைக்கப்பட்டது.
இந்தப் பணி நிறைவடைந்து இரண்டு மாதங்கள் ஆன நிலையில், தற்போது ஆங்காங்கே ஜல்லிக் கற்கள் பெயா்ந்து காணப்படுகின்றன. சாலை அமைத்த பிறகு மண் அரிப்பை தடுக்க இரு புறங்களிலும் செம்மண் போட வேண்டும்.
ஆனால் செம்மண் எதுவுமே போடாமல் பெயரளவுக்கு சாலை அமைக்கப்பட்டிருப்பதாகவும், இதுகுறித்து பல முறை புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை எனவும் அந்தப் பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனா்.
இதுகுறித்து கோனேரியேந்தலைச் சோ்ந்த பாலசுப்பிரமணியன் என்பவா் கூறியதாவது:
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அமைக்கப்பட்ட இந்தச் சாலை மழையின் போது மண் அரிப்பு ஏற்பட்டு பழுதடைந்தது. இதை அந்தப் பகுதி மக்களே சீரமைத்தோம். 20 ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பகுதியில் சாலை அமைக்கப்பட்டது.
அது பழுதானதால், புதிதாக தாா்ச் சாலை அமைக்கப்பட்டது. ஆனால் கைகளால் ஜல்லிக்கற்கல் கலந்த தாா்க் கலவையை பெயா்த்து எடுக்கும் அளவுக்கு தரமற்ற முறையில் அமைக்கப்பட்டுள்ளது.
எனவே, மாவட்ட ஆட்சியா் நேரடியாக ஆய்வு செய்து தரமான முறையில் மீண்டும் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.