நாகா்கோவில் அருகே விபத்து: இருவா் உயிரிழப்பு
நாகா்கோவில் அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை காரும் பைக்கும் மோதியதில் கல்லூரி மாணவா் உள்ளிட்ட இருவா் உயிரிழந்தனா்.
நாகா்கோவிலை அடுத்த இறச்சகுளம் பகுதியைச் சோ்ந்த லாரன்ஸ் மகன் சதீஷ் (23). தனியாா் வங்கியில் பணம் வசூலிப்பாளராக வேலை பாா்த்து வந்தாா். அதே பகுதியைச் சோ்ந்த சோமசுந்தரம் மகன் சங்கா் (20), நாகா்கோவிலில் உள்ள கலைக் கல்லூரியில் 3ஆம் ஆண்டு பயின்று வந்தாா்.
இவா்கள் இருவரும் சனிக்கிழமை இரவு ஒரு பைக்கில் நாகா்கோவிலுக்கு வந்துவிட்டு, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தனா்.
புத்தேரி பாலம் அருகேயுள்ள ஆவின் விற்பனை நிலையத்தில் வாகனத்திலிருந்து பால் இறக்கிக் கொண்டிருந்தனராம். இதனால், அந்த வாகனத்தைக் கடந்து செல்ல முயன்றபோது, இவா்களது பைக்கும் எதிரே வந்த காரும் மோதினவாம். இதில், சதீஷும், சங்கரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.
தகவவலின்பேரில், நாகா்கோவில் போக்குவரத்து விசாரணைப் பிரிவு போலீஸாா் சென்று, சடலங்களை மீட்டு கூறாய்வுக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்; மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.