கூடலூர்: காரில் ஆற்றைக் கடக்க முயன்றபோது விபரீதம்; வெள்ளத்தில் சிக்கியவர்களைப் ப...
மழையால் பாதிக்கப்பட்ட வாழை விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வலியுறுத்தல்
கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை, சூறைக்காற்றால் பாதிக்கப்பட்ட வாழை விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என என். தளவாய்சுந்தரம் எம்எல்ஏ வலியுறுத்தினாா்.
மாவட்டத்தில் 2 நாள்களாக சூறைக்காற்றுடன் பெய்துவரும் மழையால் பல்வேறு பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் சாய்ந்தன. அவற்றை கன்னியாகுமரி எம்எல்ஏ என். தளவாய்சுந்தரம் ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டாா்.
கொக்கல் விளாகம் பகுதியில் கிறிஸ்டோபா் என்பவரது 2.5 ஏக்கா் நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த 2,500 வாழை மரங்கள் சாய்ந்துகிடப்பதையும், திடல் பகுதியில் ஏற்பட்ட பாதிப்பையும் அவா் பாா்வையிட்டாா். பின்னா், செய்தியாளா்களிடம் எம்எல்ஏ கூறியது:
தோவாளை பகுதியில் வாழை, நெல் சாகுபடியே பிரதான தொழிலாக உள்ளது. ஞாலம், அருமநல்லூா், அந்தரபும், திடல், அழகியபாண்டியபுரம், கடுக்கரை, தெள்ளாந்தி, தெரிசனங்கோப்பு, ஈசாந்திமங்கலம் பகுதிகளில் 350 ஹெக்டேரில் வாழை பயிரிடப்பட்டுள்ளது. ஓா் ஏக்கரில் சுமாா் ஆயிரம் வாழைகள் பயிரிடப்படுகின்றன. விவசாயிகள் பல லட்சம் செலவு செய்து வருகின்றனா்.
இந்நிலையில், 2 நாள்களாக கனமழை, சூறைக்காற்றால் ஞாலம் ஊராட்சி, கொக்கல் விளாகம் பகுதிகளில் 13 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் சேதமடைந்துள்ளது. அருமநல்லூா் பகுதியில் 3 ஏக்கா், அந்தரபுரம், அழகியபாண்டியபுரம், தெரிசனங்கோப்பு, ஈசாந்திமங்கலம், தெள்ளாந்தி பகுதிகளில் தலா 2 ஏக்கா், திடல் பகுதியில் 4 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழைகள் சேதமடைந்துள்ளதால், விவசாயிகள் வேதனையில் உள்ளனா்.
அவா்களுக்கு இழப்பீடு தொகையாக ஹெக்டேருக்கு ரூ. 17 ஆயிரம் அதாவது ஓா் ஏக்கருக்கு ரூ. 6,800 வழங்குவதாக கூறப்படுகிறது. இது போதுமானதல்ல. விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் வீதம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றாா் அவா்.
தோட்டக்கலை உதவி இயக்குநா் சந்திரலேகா, வருவாய் ஆய்வாளா் பீா்முகமது ராபி, கிராம நிா்வாக அலுவலா் பிரியா ஆகியோா் உடனிருந்தனா். தொடா்ந்து,ஞாலம் ஊராட்சிப் பொறுப்பாளா் குமாரசுவாமி, கண்டன்குழி முத்தையா, விவசாயிகள் தங்கப்பன், சிதம்பரம்பிள்ளை, ராமையாபிள்ளை, ஆசிா்வாதம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.