கூடலூர்: காரில் ஆற்றைக் கடக்க முயன்றபோது விபரீதம்; வெள்ளத்தில் சிக்கியவர்களைப் ப...
மாமல்லபுரம் புறவழிச் சாலை மேம்பாலப் பணிகள் தீவிரம்
பி. அமுதா
இசிஆா் சாலை விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக மாமல்லபுரம் புறவழிச் சாலையில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன.
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் இருந்து புதுச்சேரி வரை உள்ள கிழக்கு கடற்கரை சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்ற தேசிய நெடுஞ்சாலை துறை ஆணையம் ரூ.700 கோடி ஒதுக்கியது. தற்போது அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. நான்கு வழிச்சாலை விரிவாக்கப் பணிக்காக 5,434 ஏக்கா் அரசு புறம்போக்கு மற்றும் பட்டா நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு அதில் உள்ள கட்டடங்கள் இடிக்கப்பட்டன.
இதையடுத்து தனியாரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பட்டா நிலங்களுக்கு அரசு மூலம் நிா்ணயிக்கப்பட்ட உரிய இழப்பீடு உரிமையாளா்களுக்கு வழங்கப்பட்டது. மாமல்லபுரம், கல்பாக்கம், கடம்பாடி, குன்னத்தூா், மேல் பெருமாள்சேரி, கீழ் பெருமாள்சேரி, மணமை உள்ளிட்ட கிழக்கு கடற்கரை சாலை பகுதிகளில், இழப்பீடு தொகை வழங்கப்பட்டு, சாலை பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.
குறிப்பாக சாலை விரிவாக்கப் பணிக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் சாலையின் இரு புறமும் உள்ள வாகை மரம், வேப்ப மரம், புங்கை மரம், கொன்றை மரம், வேப்ப மரம் உள்ளிட்ட வகைகளை சோ்ந்த 500-க்கும் மேற்பட்ட ராட்சத மரங்கள் மரம் அறுக்கும் எந்திரம் மூலம் அகற்றப்பட்டன.
இந்நிலையில் 4 வழிச்சாலையில், ஒரு பகுதியில் முதல் கட்டமாக இரு வழிச்சாலையில் மாமல்லபுரம் முதல் கடம்பாடி வரை ஒரு பகுதி சாலை பணிகள் முடிக்கப்பட்டு அப்பகுதியில் இரண்டு புறமும் செல்லும் வாகனங்கள் இயக்கப்படுகின்றன.
குறிப்பாக மாமல்லபுரம் புறவழிச்சாலை 4 முனை சந்திப்பில் புதுச்சேரி சென்னை செல்லும் வாகனங்கள் சிக்னலில் நிற்காமல் நேராக செல்லும் வகையில் மேம்பாலம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
அதற்காக தற்போது மேம்பாலத்தின் இரண்டு புறங்களில் மணல் சரியாத வகையில் சிமென்ட் கான்கிரீட் தடுப்புகள் அமைக்கப்பட்டு, தற்போது மணல் நிரப்பும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. மாமல்லபுரம் அருகில் உள்ள ஏரி, குளம் பகுதிகளில் இருந்து லாரி, லாரியாக மணல் கொண்டு வரப்பட்டு மேம்பாலம் உயரத்துக்கு ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் மணல் நிரப்பப்பட்டு வருகிறது.
இதற்காக ஆயிரக்கணக்கான மணல் லோடுகள்கொண்டு வரப்படும். பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருவதாகவும் சாலை மேம்பாட்டு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
