அபார வெற்றியுடன் நடப்பு ஐபிஎல் தொடரை நிறைவு செய்த சிஎஸ்கே!
குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 83 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
ஐபிஎல் தொடரில் அகமதாபாதில் நடைபெற்ற இன்றையப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது.
டிவால்ட் பிரேவிஸ், டெவான் கான்வே அசத்தல்
முதலில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 230 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஆயுஷ் மாத்ரே மற்றும் டெவான் கான்வே அணிக்கு சிறப்பான தொடக்கத்தைத் தந்தனர். அர்ஷத் கான் வீசிய ஆட்டத்தின் இரண்டாவது ஓவரில் ஆயுஷ் மாத்ரே 28 ரன்கள் விளாசி அசத்தினார்.
இருப்பினும், அவர் 17 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 3 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். இதனையடுத்து, டெவான் கான்வேவுடன் உர்வில் படேல் ஜோடி சேர்ந்தார்.
இந்த இணை அதிரடியைத் தொடர்ந்தது. அதிரடியாக விளையாடிய உர்வில் படேல் 19 பந்துகளில் 37 ரன்கள் எடுத்து சாய் கிஷோர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். ஷிவம் துபே 8 பந்துகளில் 17 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 2 சிக்ஸர்கள் அடங்கும். அதன் பின், கான்வே மற்றும் டிவால்ட் பிரேவிஸ் ஜோடி சேர்ந்தனர். பிரேவிஸ் களமிறங்கியது முதலே அதிரடியில் மிரட்டினார். அவ்வப்போது பவுண்டரிகளை விரட்டி விளையாடிய டெவான் கான்வே 35 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 6 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும்.
மறுமுனையில் அதிரடியில் மிரட்டிய டிவால்ட் பிரேவிஸும் அரைசதம் கடந்து அசத்தினார். அவர் 23 பந்துகளில் 57 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் அடங்கும். ஜடேஜா 18 பந்துகளில் 21 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார்.
குஜராத் டைட்டன்ஸ் தரப்பில் பிரசித் கிருஷ்ணா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். சாய் கிஷோர், ரஷித் கான் மற்றும் ஷாருக்கான் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
சிஎஸ்கே அபார வெற்றி
231 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணி 18.3 ஓவர்களில் 147 ரன்களில் ஆட்டமிழந்தது.
இதன் மூலம், சென்னை சூப்பர் கிங்ஸ் 83 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி நடப்பு ஐபிஎல் தொடரை வெற்றியுடன் நிறைவு செய்தது.