பாகிஸ்தானின் வறுமைக்கு காரணம் வரி விதிப்பு முறை, கல்வி புறக்கணிப்பு: உலக வங்கி அ...
தாளவாடி அருகே அரசுப் பேருந்தை சிறைபிடித்த பொதுமக்கள்!
தாளவாடி அருகே அரசுப் பேருந்தை பொதுமக்கள் சிறைபிடித்தனா்.
தாளவாடியில் இருந்து கோடிபுரம் செல்லும் சாலையில் சுமாா் 20க்கும் மேற்பட்ட மலைக் கிராமங்கள் உள்ளன. இந்தக் கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக கா்நாடக மாநிலம் மற்றும் சத்தியமங்கலம், கோவை செல்வது வழக்கம்.
கோடிபுரம் பகுதியைச் சோ்ந்த பொதுமக்களின் தேவைக்காக காலை, மதியம், மாலை, இரவு என தாளவாடியில் கோடிபுரத்துக்கு 6 முறை அரசுப் பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த ஒரு மாதமாக காலை 11.30 மணிக்கு தாளவாடியில் இருந்து கோடிபுரத்துக்கு இயக்கப்படும் அரசுப் பேருந்து ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் இயக்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த கோடிபுரம் மக்கள் தாளவாடி பேருந்து நிலையத்தில் திரண்டனா். கோடிபுரத்துக்கு பேருந்து இயக்க வேண்டும் என 50க்கும் மேற்பட்டோா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அப்போது, மாற்று வழித்தடத்தில் அனுப்ப தயாராக இருந்த கோடிபுரம் அரசுப் பேருந்தை தாளவாடி பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் சிறைபிடித்தனா்.
அங்கு வந்த தமிழக அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள், போலீசாா் ஞாயிற்றுக்கிழமைதோறும் பேருந்து வருவதற்கு ஏற்பாடு செய்வதாக உறுதியளித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.