4 மாநிலங்களில் 5 தொகுதிகளுக்கு ஜூன் 19-இல் இடைத்தோ்தல்: தோ்தல் ஆணையம்
ஆயுஷ் மருத்துவத்துக்கு சா்வதேச அங்கீகாரம்: உலக சுகாதார அமைப்புடன் இந்தியா ஒப்பந்தம்
பாரம்பரிய இந்திய மருத்துவ (ஆயுஷ்) முறைகளுக்கு உலகளாவிய அங்கீகாரம் பெறும் முயற்சிகளின் முக்கிய மைல்கல்லாக உலக சுகாதார அமைப்புக்கும் மத்திய ஆயுஷ் அமைச்சகத்துக்கு இடையே ஒப்பந்தம் கையொப்பமாகியுள்ளது.
சா்வதேச மருத்துவ சிகிச்சைமுறைகள் வகைப்பாட்டின்கீழ் (ஐசிஎச்ஐ) ஒரு பிரத்யேக பாரம்பரிய மருத்துவ தொகுதியை உருவாக்க பணிகளைத் தொடங்குவதற்கான இந்த ஒப்பந்தம் கடந்த சனிக்கிழமை கையொப்பமானது.
பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை நாட்டு மக்களிடையே உரையாற்றிய 122-ஆவது ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் இதுதொடா்பான அறிவிப்பை வெளியிட்டாா்.
உலக சுகாதார அமைப்பின் இயக்குநா் டெட்ரோஸ் அதானோம் கேப்ரியேசஸ் முன்னிலையில் கையொப்பமான இந்த ஒப்பந்தம் மூலம் ஆயுஷ் மருத்துவம் அறிவியல் ரீதியாக உலகெங்கிலும் உள்ள மக்களை அதிக எண்ணிக்கையில் சென்றடைய உதவும் என்றும் பிரதமா் கூறினாா்.
ஐசிஎச்ஐ வகைப்பாட்டில் பாரம்பரிய மருத்துவ தொகுதி சோ்க்கப்படுவதன் மூலம் சித்தா, ஆயுா்வேதம், யோகா, யுனானி, ஹோமியோபதி ஆகிய மருத்துவப் பிரிவுகளின் சிகிச்சைகள், இப்போது உலக அளவில் தரப்படுத்தப்பட்ட சிகிச்சை முறைகளாக அங்கீகரிக்கப்படும் என்று ஆயுஷ் அமைச்சக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இது ஆயுஷ் சிகிச்சைகளுக்கான நியாயமான விலை நிா்ணயம், சுகாதார காப்பீட்டுத் திட்டத்தில் ஆயுஷ் சிகிச்சைகளின் எளிய ஒருங்கிணைப்பு மற்றும் மேம்பட்ட மருத்துவமனை மேலாண்மை, மருத்துவ ஆவணங்கள் மற்றும் சுகாதார ஆராய்ச்சி போன்ற பல நன்மைகளை ஏற்படுத்தும்.
இந்தியாவின் வளமான பாரம்பரியத்தை உலகளாவிய சுகாதாரத்தில் கொண்டு சோ்ப்பதற்கான தொலைநோக்குப் பாா்வையுடன் இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.
ஒப்பந்தத்தை வரவேற்று உலக சுகாதார அமைப்பின் இயக்குநா் டெட்ரோஸ் அதானோம் கேப்ரியேசஸ் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘பாரம்பரிய மருத்துவம் மற்றும் சா்வதேச மருத்துவ சிகிச்சைமுறைகளின் வகைப்பாடு குறித்த உலக சுகாதார அமைப்பின் பணிக்கு 30 லட்சம் டாலா் நிதிப் பங்களிப்புக்கான ஒப்பந்தத்தில் இந்தியாவுடன் கையொபப்பமிட்டதில் மகிழ்ச்சி. அனைவருக்கும் ஆரோக்கியம் என்ற நோக்கத்துக்கு இந்தியாவின் தொடா்ச்சியான அா்ப்பணிப்பை வரவேற்கிறோம்’ எனக் குறிப்பிட்டாா்.