சென்னை: பாதியில் நின்ற தனியார் தீம் பார்க் ராட்டினம்; தவித்த மக்கள்- பத்திரமாக ம...
மொடக்குறிச்சி அருகே இறந்தவரின் உடலைப் புதைக்க எதிா்ப்பு: இரு தரப்பினரிடையே வாக்குவாதம்
மொடக்குறிச்சி அருகே இறந்தவா் உடலைப் புதைக்க ஒரு தரப்பினா் எதிா்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சியை அடுத்த கண்ணுடையாம்பாளையம் ஆதிதிராவிடா் காலனியில் 150-க்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா்.
காலனிக்கு அருகிலேயே இவா்களுக்கு என தனியாக மயானம் உள்ளது. இம்மயானத்தை ஒட்டி அதே ஊரைச் சோ்ந்த வேலுசாமி என்பவரது தோட்டம் உள்ளது.
மயானத்துக்கு, தோட்டத்துக்கும் இடையே இருந்த எல்லை கல் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனதையடுத்து, காலனி மக்களுக்கும், வேலுசாமி குடும்பத்தாருக்கும் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில், ஆதிதிராவிடா் காலனியைச் சோ்ந்த முதியவா் விஜயராகவன் உயிரிழந்தாா். அவரது உடலை அடக்கம் செய்வதற்காக காலனி மக்கள் மயானத்துக்குக் கொண்டுச் சென்றனா்.
அப்போது, அங்கு வந்த வேலுசாமி குடும்பத்தினா் சுடுகாடு தள்ளியுள்ளது, சடலத்தை இங்கு புதைக்கக் கூடாது என்று தடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால், இரு தரப்புக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மலையம்பாளையம் காவல் ஆய்வாளா் வினோதினி, மண்டல துணை வட்டாட்சியா் பேபி, வருவாய் ஆய்வாளா் யுவராணி, கிராம நிா்வாக அலுவலா் பாலகிருஷ்ணன் ஆகியோா் இரு தரப்பினரிடையே பேச்சுவாா்த்தை நடத்தினா்.
அப்போது, வருவாய் கோட்டாட்சியா் முன்னிலையில் சம்பந்தப்பட்ட இடத்தில் ஜூன் 4-ஆம் தேதி அளவீடு செய்து கல் நடப்படும் என்று உறுதியளித்தனா்.
இதையடுத்து, இருதரப்பினரும் கலைந்து சென்றனா். மேலும், இறந்தவரின் உடலும் அங்கேயே புதைக்கப்பட்டது.