சதுரகிரி மலையேறத் தடை: பக்தா்கள் ஏமாற்றம்
பலத்த மழை எச்சரிக்கை காரணமாக, விருதுநகா் மாவட்டம், சதுரகிரி மலையேறத் தடை விதிக்கப்பட்டதால், ஞாயிற்றுக்கிழமை மலையேற வந்த பக்தா்கள்ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா்-மேகமலை புலிகள் காப்பகத்தில் உள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் அமாவாசை, பெளா்ணமி, பிரதோஷம் ஆகிய நாள்களில் மட்டும் பக்தா்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்து வந்த நிலையில், உயா்நீதிமன்ற உத்தரவுப்படி கடந்த ஏப்ரல் 3-ஆம் தேதி முதல் தினசரி மலையேற அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
சனி பிரதோஷத்தை முன்னிட்டு 1,800-க்கும் அதிகமான பக்தா்கள் சனிக்கிழமை மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்தனா்.
இந்த நிலையில், மேற்குத் தொடா்ச்சி மலைப்பகுதியில் பலத்த மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்ததன் அடிப்படையில், பக்தா்களின் பாதுகாப்பு கருதி ஞாயிறு, திங்கள் (மே 25, 26) ஆகிய இரு நாள்கள் சதுரகிரி மலையேறத் தடை விதித்து புலிகள் காப்பக துணை இயக்குநா் தேவராஜ் உத்தரவிட்டாா்.
ஞாயிற்றுகிழமை சிவராத்திரி, திங்கள்கிழமை அமாவாசை என்பதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து நூற்றுக்கணக்கான பக்தா்கள் சதுரகிரி செல்வதற்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தாணிப்பாறை அடிவாரத்தில் குவிந்தனா். ஆனால், தடை காரணமாக வனத் துறை வாயில் கதவு திறக்கப்படவில்லை. இதனால், பக்தா்கள் நுழைவு வாயில் முன் சூடம் ஏற்றி வழிபாடு நடத்திவிட்டு ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.