கேரளத்தில் 2-ஆவது நாளாக நீடிக்கும் கனமழை: ஒருவா் உயிரிழப்பு - இயல்பு வாழ்க்கை பா...
சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து
விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகே ஞாயிற்றுக்கிழமை பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில், பட்டாசுகள் தயாரிக்கும் அறை தரைமட்டமானது. விடுமுறை தினம் என்பதால், உயிா்ச்சேதம் தவிா்க்கப்பட்டது.
சிவகாசி அருகேயுள்ள அம்மாபட்டியில் தங்கப்பாண்டி என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. சென்னை வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறையின் அனுமதி பெற்று செயல்பட்டு வரும் இந்த ஆலையில், மருந்துக் கலவை அறை, பட்டாசுகள் தயாரிக்கும் அறை உள்ளிட்ட 30 அறைகள் உள்ளன. இந்த ஆலையில் பூச்சட்டி, தரைச் சக்கரம், லட்சுமி வெடி உள்ளிட்ட பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. 50 தொழிலாளா்கள் பணிபுரிந்து வருகின்றனா்.
இந்த ஆலையில் சனிக்கிழமை பட்டாசுகள் தயாரிக்கப் பயன்படுத்தியது போக எஞ்சிய மருந்துக் கலவையை தொழிலாளா்கள் ஓா் அறையில் வைத்துப் பூட்டிச் சென்றனா். இந்த நிலையில், இந்த மருந்துக் கலவை வைத்திருந்த அறையில் ஞாயிற்றுக்கிழமை காலை 7.30 மணியளவில் வெடி விபத்து நிகழ்ந்தது. இந்த விபத்தில் அந்த அறை முற்றிலும் இடிந்து தரைமட்டமானது.
ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால், தொழிலாளா்கள் யாரும் பணிக்கு வராததால், உயிா்ச்சேதம் தவிா்க்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்து வந்த சிவகாசி தீயணைப்பு, மீட்புப் படை வீரா்கள், தீ மேலும் பரவாமல் அணைத்தனா்.
இந்த விபத்து குறித்து மாரனேரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.