கூடலூர்: காரில் ஆற்றைக் கடக்க முயன்றபோது விபரீதம்; வெள்ளத்தில் சிக்கியவர்களைப் ப...
பாகிஸ்தானில் இருப்பவர்கள் இந்திய குடிமக்களை கொல்வதை அனுமதிக்க முடியாது: சசி தரூர்
நியூயார்க்: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானில் இருக்கும் யாரும் இந்திய குடிமக்களைக் கொன்றுவிட்டு தண்டனையின்றி தப்பிப்பதை அனுமதிக்க முடியாது என்ற புதிய நடைமுறை தொடங்கியுள்ளதாக காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் தெரிவித்தார்.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களைத் தகர்க்கும் நோக்கில் இந்தியாவின் முப்படைகளும் "ஆபரேஷன் சிந்தூர்' என்ற நடவடிக்கையை மேற்கொண்டன. இது குறித்து பல்வேறு வெளிநாடுகளுக்கு எடுத்துக் கூறும் நோக்கில் 7 எம்.பி.க்கள் தலைமையிலான குழுக்கள் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளன. அவற்றில் காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் தலைமையிலான குழு அமெரிக்கா, கயானா, பனாமா, கொலம்பியா, பிரேசில் ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இந்திய}அமெரிக்கர்கள், அமெரிக்க ஊடகங்கள் மற்றும் சிந்தனையாளர் அமைப்புகளைச் சேர்ந்தவர்களை இக்குழுவினர் சந்தித்துப் பேச இந்தியத் தூதரகம் சனிக்கிழமை ஏற்பாடு செய்திருந்தது. இந்தச் சந்திப்பில் பங்கேற்றவர்களிடையே சசி தரூர் பேசியதாவது:
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானில் இருக்கும் யாரும் இந்திய குடிமக்களைக் கொன்றுவிட்டு தண்டனையின்றி தப்பிப்பதை அனுமதிக்க முடியாது என்ற புதிய நடைமுறை தொடங்கியுள்ளது. இந்தியாவில் யாரும் தாக்குதல் நடத்தினால் அதற்கு அவர்கள் விலைகொடுக்க வேண்டிவரும்.
நாங்கள் எதையும் தொடங்க விரும்பவில்லை என்பதே பாகிஸ்தானுக்கு இந்தியா விடுத்த தெளிவான செய்தியாகும். நாங்கள் பயங்கரவாதிகளுக்கு செய்தியை அனுப்புகிறோம்} "நீங்கள் (தாக்குதலை) ஆரம்பித்தீர்கள்; நாங்கள் பதிலடி கொடுத்தோம். நீங்கள் நிறுத்தினால் நாங்களும் நிறுத்துவோம்'. பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து 88 மணி நேரத்துக்கு போர் நடைபெற்றது.
சில ஆண்டுகளாக எங்களது கவனமானது உலகின் வேகமாக வளரும் தாராள சந்தைகளைக் கொண்ட ஜனநாயக நாடுகள் மீது உள்ளது. எங்கள் பொருளாதாரத்தை வளர்ப்பதில் கவனம் செலுத்தி வருகிறோம். தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் ஏராளமானோரை வறுமைக்கோட்டில் இருந்து மீட்கவும் முக்கியத்துவம் அளித்து வருகிறோம் என்று சசி தரூர் பேசினார்.
இரட்டை கோபுர நினைவிடத்தில் அஞ்சலி: சசி தரூர் தலைமையிலான குழுவினர் நியூயார்க் நகரில் கடந்த 2001}ஆம் ஆண்டு செப்டம்பர் 11}ஆம் தேதி பயங்கரவாதத் தாக்குதல் நடைபெற்ற இரட்டை கோபுர கட்டட நினைவிடத்துக்குச் சென்றனர். இத்தாக்குதலில் உயிரிழந்தோருக்கு அவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
அப்போது சசி தரூர் செய்தியாளர்களிடம் பேசுகையில் "அமெரிக்காவைப் போலன்றி இந்தியா பெரும் எண்ணிக்கையிலான பயங்கரவாதத் தாக்குதல்களை எதிர்கொண்டது.
பயங்கரவாதம் என்பது அனைவரும் பகிர்ந்து கொள்ளும் பிரச்னை என்பதை நினைவுபடுத்தவும் நியூயார்க் பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்த இந்தியர்கள் உள்ளிட்டோருக்கு அஞ்சலி செலுத்தவும் நாங்கள் இங்கு வந்துள்ளோம். பயங்கரவாதம் உலகளாவிய பிரச்னையாகும்.
நாம் அதை ஒற்றுமையுடன் எதிர்த்துப் போராட வேண்டும். இதுவே உலகுக்கு இந்தியாவின் முக்கியமான செய்தியாகும்' என்றார்.