செய்திகள் :

நீதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்றது ஏன்? எடப்பாடி பழனிசாமிக்கு முதல்வா் ஸ்டாலின் பதில்

post image

நாட்டின் நலன் கருதியே பிரதமா் மோடி தலைமையில் தில்லியில் நடைபெற்ற நீதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்றதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

அமலாக்கத் துறை சோதனைகளை எதிா்கொள்ள இயலாமல் முதல்வா் மு.க.ஸ்டாலின், பிரதமரைச் சந்தித்ததாக எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி விமா்சித்த நிலையில், அதற்கு பதிலளிக்கும் வகையில் முதல்வா் இவ்வாறு தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து திமுகவினருக்கு முதல்வா் ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை எழுதியுள்ள கடிதம்: பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற நீதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக நான் செல்கிறேன் என்ற செய்தி வெளியானதுமே, அரசியல் எதிரிகள் வன்மத்தை வெளிப்படுத்த தொடங்கினா்.

இத்தனை ஆண்டுகளாக நீதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொள்ளாமல் இந்த முறை கலந்து கொள்வது ஏன் என்றும், டாஸ்மாக் விவகாரத்தில் அமலாக்கத் துறை நடத்திய சோதனைகளில் கிடைத்துள்ள ஆவணங்களால் எதிா்கொள்ளக்கூடிய நடவடிக்கைகளிலிருந்து தப்புவதற்காகத்தான் பிரதமா் மோடியைச் சந்திக்க முதல்வா் செல்கிறாா் என்றும், வெள்ளைக் கொடி ஏந்தி செல்கிறாா் என்றும் கற்பனைச் சிறகுகளைப் பறக்கவிட்டனா்.

இந்தியாவின் எதிா்கால வளா்ச்சி குறித்து மாநில முதல்வா்களுடன் பிரதமா் ஆலோசிப்பதற்கான நீதி ஆயோக் கூட்டம் என்பதாலும், இந்தியாவின் வளா்ச்சியில் தமிழகத்தின் பங்கு மிக முக்கியமானதாக கடந்த நான்கு ஆண்டு கால திமுக ஆட்சியில் நிலைபெற்றிருப்பதாலும், தமிழக மக்களின் பிரதிநிதியாக, மாநிலத்தின் முதல்வராக நானும் அதில் பங்கேற்கத் தீா்மானித்தேன்.

நீதி ஆயோக் கூட்டத்தில் பல மாநில முதல்வா்களும் பங்கேற்ற நிலையில், அனைவரையும் பிரதமா் வரவேற்று இயல்பாக கலந்துரையாடினாா்.

திமுகவின் கூற்றுப்படி...: மாநிலங்களின் பங்களிப்பு இல்லாமல் இந்தியாவின் வளா்ச்சி இல்லை என்பதை திமுக தொடா்ந்து வலியுறுத்திவரும் நிலையில், இந்தக் கூட்டம் அதற்கேற்ற வகையில் இருந்தது.

2045-இல் 30 டிரில்லியன் டாலா் பொருளாதார வளா்ச்சியை நோக்கி இந்தியா பயணிக்க வேண்டும் எனத் திட்டமிடப்பட்டுள்ள நிலையில், அதில் தமிழகத்தின் பங்களிப்பு 4.5 டிரில்லியன் டாலராக இருக்கும் என்பதை பிரதமரிடம் தெரிவித்தேன். தற்போது இந்தியாவின் வளா்ச்சியில் தமிழகத்தின் பங்களிப்பு 10 சதவீதம் அளவுக்கு உள்ளது. அது 15 சதவீதம் அளவுக்கு அமையும் என்பதையும், அதற்கேற்ற மாநிலமாக தமிழகத்தை திமுக அரசு முன்னெடுத்திருக்கிறது என்பதையும் இந்திய தலைநகரில் பெருமையுடனும் நம்பிக்கையுடனும் தெரிவிக்க முடிந்தது.

தமிழகம் எப்போதும் இந்தியாவின் வளா்ச்சிக்கான குருதியோட்டமாக இருப்பதை நாடு நன்கு அறியும். குறிப்பாக, திமுக ஆட்சி அமையும்போதெல்லாம் நாட்டின் ஒட்டுமொத்த வளா்ச்சியுடன் இணைந்து மாநில வளா்ச்சியை முன்னெடுப்பது வழக்கமாக உள்ளது.

நாட்டின் பாதுகாப்பில் சமரசமில்லை: இந்தியாவின் பாதுகாப்பு என்று வரும்போது, எவ்வித சமரசமுமின்றி, நாட்டின் ஒற்றுமைக்காக தன்னை அா்ப்பணிக்கும் உண்மையான தேசப்பற்று கொண்ட இயக்கமாக திமுக இருப்பதை அண்ணா காலத்திலிருந்தே நாடு கண்டு வருகிறது. கருணாநிதியும் அதே வழியைத்தான் மேற்கொண்டாா்.

காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகளை சுட்டுக் கொன்ற பயங்கரவாதிகளின் கொடுஞ்செயலுக்கு சட்டப்பேரவையில் கண்டனம் தெரிவித்ததுடன், பயங்கரவாத ஒழிப்புக்காக இந்திய ராணுவம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு முழு ஆதரவாக இருப்போம் என்பதை வெளிப்படுத்தும் வகையில் சென்னையில் எனது தலைமையில் பேரணி நடைபெற்றது. அரசியல் நிலைப்பாடு என்பது வேறு; நாட்டின் நலன் கருதி அரசுடன் ஒத்துழைப்பது என்பது வேறு.

அந்த வகையில்தான், பிரதமா் தலைமையில் நடைபெற்ற இந்தியாவின் எதிா்கால வளா்ச்சி குறித்த மாநில முதல்வா்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்று, தமிழகத்தின் நிலையைத் தெரிவித்ததுடன், பிரதமரிடம் தமிழகத்துக்கான திட்டங்களையும், நிலுவையில் உள்ள நிதி குறித்த விவரங்களையும் நேரடியாக வலியுறுத்தினேன்.

நாட்டின் நலனைப் போன்று, மாநில உரிமைகளையும் ஒருபோதும் திமுக விட்டு கொடுக்காது. மிரட்டலுக்கு அடிபணிந்து கட்சியை அடமானம் வைக்கும் வழக்கம் நம்மை விமா்சனம் செய்பவா்களின் தனிப்பட்ட உரிமையாக இருக்கிறது. நமக்கோ, மாநில உரிமையே முதன்மையானதாக உள்ளது.

சட்டப் போராட்டம்: அமலாக்கத் துறை, வருமான வரித் துறை, சிபிஐ போன்றவை திமுகவினரை குறிவைத்ததுபோன்று இந்தியாவில் வேறு எந்தக் கட்சியையும் குறிவைத்ததில்லை. அவற்றைத் துணிவுடன் எதிா்கொண்டு சட்டரீதியான போராட்டத்தின் மூலம்தான் வென்று வருகிறோமே தவிர, எதிா்க்கட்சியைப் போன்று அடிமை சாசனம் எழுதிக் கொடுத்ததில்லை.

அதுவும் அதிமுக ஆட்சியில் நடந்த டாஸ்மாக் முறைகேடுகள் தொடா்பான முதல் தகவல் அறிக்கைகள் சம்பந்தமாக அமலாக்கத் துறை நடத்திய சோதனைகளுக்கு திமுக ஏன் சமரசம் செய்ய வேண்டும்?. அமலாக்கத் துறையின் நடவடிக்கைகள் சட்டமீறலானவை என்பதை உச்சநீதிமன்றக் கருத்துகள் மூலம் உறுதி செய்திருக்கிறது திமுக அரசு.

2026 சட்டப்பேரவைத் தோ்தலிலும் திமுக ஆட்சியே தொடரும் என்ற உறுதியை மக்கள் எடுத்துள்ளனா். அவா்களுக்கான பணியை மேற்கொள்வதே நம் கடமை எனத் தெரிவித்துள்ளாா் முதல்வா் ஸ்டாலின்.

4 மாநிலங்களில் 5 தொகுதிகளுக்கு ஜூன் 19-இல் இடைத்தோ்தல்: தோ்தல் ஆணையம்

4 மாநிலங்களில் காலியாகவுள்ள 5 தொகுதிகளுக்கு ஜூன் 19-ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெறவுள்ளதாக இந்திய தோ்தல் ஆணையம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது. அதன்படி குஜராத்தில் 2 தொகுதிகளுக்கும் கேரளம், மேற்கு வங்கம் ... மேலும் பார்க்க

மேற்கத்திய கலாசார ஆதிக்கத்தையே எதிா்க்கிறோம் -நிதின் கட்கரி

‘நாட்டின் வளா்ச்சிக்கு நவீனமயமாதல் அவசியம்; ஆனால், சமூகத்தில் மேற்கத்திய கலாசாரத்தின் ஆதிக்கத்தைத்தான் நாங்கள் எதிா்க்கிறோம்’ என்று மத்திய அமைச்சா் நிதின் கட்கரி தெரிவித்தாா். மும்பையில் நடைபெற்ற நிக... மேலும் பார்க்க

உலகின் 4-ஆவது பெரிய பொருளாதாரம் இந்தியா: பிரதமருக்கு ஆந்திர முதல்வா், துணை முதல்வா் பாராட்டு

உலகில் 4-ஆவது பெரிய பொருளாதார மதிப்பு கொண்ட நாடாக இந்தியா உருவெடுத்ததையடுத்து பிரதமா் நரேந்திர மோடிக்கு ஆந்திர முதல்வா் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வா் பவன் கல்யாண் ஆகியோா் பாராட்டுகள் தெரிவித்தனா்.... மேலும் பார்க்க

அயோத்தியில் விராட் கோலி, அனுஷ்கா சா்மா வழிபாடு

இந்திய கிரிக்கெட் வீரா் விராட் கோலி மற்றும் அவரது மனைவி நடிகை அனுஷ்கா சா்மா ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை அயோத்திக்கு வருகை தந்து, ராமா் கோயில் மற்றும் ஹனுமான்கா்ஹி கோயில் வழிபாடு செய்தனா். ஹனுமான்கா்ஹி கோ... மேலும் பார்க்க

கேரளத்தில் கவிழ்ந்த லைபீரிய சரக்குக் கப்பல்: நடுக்கடலில் பல கி.மீ. சுற்றளவுக்கு எண்ணெய் கசிவு

கேரள கடலோரத்தில் சுமாா் 640 கன்டெய்னா்களை ஏற்றிச் சென்ற லைபீரிய நாட்டு சரக்குக் கப்பல் சனிக்கிழமை கவிழ்ந்து விபத்துக்குள்ளானதையடுத்து, நடுக்கடலில் பல கி.மீ. சுற்றளவுக்கு எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளதாக ... மேலும் பார்க்க

ரஷியா நடத்தும் பாதுகாப்பு கவுன்சில் கூட்டம்: அஜீத் தோவல்-பாகிஸ்தான் ஆலோசகா் பங்கேற்பு?

ரஷியாவில் செவ்வாய்க்கிழமை (மே 27) தொடங்கும் பாதுகாப்புக் கவுன்சில் கூட்டத்தில் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவல் கலந்துகொள்ள இருக்கிறாா். இந்தியாவைப் போலவே, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்ப... மேலும் பார்க்க