தனிநபர் வருவாய் குறித்து பிரதமர் பேசாதது ஏன்? காங்கிரஸ்
நாட்டு மக்களின் தனிநபர் வருவாய் குறித்து பிரதமர் நரேந்திர மோடி பேசாதது ஏன்? என காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கேரா கேள்வி எழுப்பியுள்ளார்.
உலகின் நான்காவது மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா வளர்ந்துள்ளதாக நீதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி (சிஇஓ) வி.ஆா்.சுப்பிரமணியம் நேற்று (மே 24) தெரிவித்ததைத் தொடர்ந்து, இவ்வாறு பவன் கேரா பேசியுள்ளார்.
இது குறித்து ஆங்கில ஊடகத்துக்கு (ஐஏஎன்எஸ்) அவர் அளித்த பேட்டியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
''ஆளும் பாஜக அரசு எண்களை வைத்துக்கொண்டு விளையாடுகிறது. ஆனால், நாட்டில் கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவு வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்துள்ளது.
செல்வந்தருக்கும் ஏழைகளுக்குமான வித்தியாசம் மிகப்பெரியதாக உள்ளது. நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் மாதத் தவணை கட்டுவதற்கே போராடி வருகின்றனர்.
சிறு, குறு மற்றும் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த தொழில்கள் மற்றும் அமைப்புசாராத் தொழில்கள் முற்றிலும் முடங்கியுள்ளன. நாட்டில் உள்ள 5 அல்லது 6 செல்வந்தர்களின் சொத்து மதிப்பை வைத்து, நாடு பொருளாதாரத்தில் உயர்ந்துள்ளதாக எண் விளையாட்டு விளையாடுவது தவறானது.
போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு இந்தியா - பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தம் செய்ததாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியதை கேட்கும்போது வலிமிகுந்ததாக இருந்தது. டிரம்ப் இவ்வாறு அறிவிப்பது, நாட்டில் பலவீனமான தலைமையையே பிரதிபலிக்கிறது.
ஆபரேஷன் சிந்தூர் பதிலடித் தாக்குதலின்போது இந்திய பாதுகாப்புப்படையின் வலிமையை உலகம் கண்டது. அதேநேரம் பிரதமரின் பலவீனமான தலைமையையும் உலகம் பார்த்தது. போர் நிறுத்தப் புரிந்துணர்வு எவ்வாறு எட்டப்பட்டது? வணிகத்தை நிறுத்துவதாகக் கூறி இருநாடுகளுக்கும் இடையே போரை நிறுத்த மத்தியஸ்தம் செய்ததாக டிரம்ப் திடீரெனப் பேசுகிறார்.
பாதுகாப்புப் படையின் பல திறமையான சாதனைகளுக்கான பலன்களை மோடி தலைமையிலான பாஜக அரசு எடுத்துக்கொள்கிறது'' என கேரா விமர்சித்தார்.
இதையும் படிக்க | லாலுவின் மூத்த மகன் கட்சியிலிருந்து அதிரடி நீக்கம்: காரணம் என்ன?