குழந்தை கடத்தல் தடுப்புப் பிரிவின் மூலம் 964 குழந்தைகள் மீட்பு!
குழந்தைகள் கடத்தல் தடுப்புப் பிரிவின் மூலம் இதுவரை 964 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளதாக குழந்தைகளின் உரிமை பாதுகாப்பு தேசிய ஆணையம் அறிவித்துள்ளது.
இது குறித்து அந்த ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, சமீபத்தில் பிகார் மாநிலம் சரன் மாவட்டத்தில் இயங்கிவந்த இசைக் குழுவில் இருந்து 17 சிறுமிகள் மீட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இதுவரை 964 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிகாரில் செயல்பட்டுவரும் உள்ளூர் இசைக்குழுவில், 18 வயது நிரம்பாத சிறுமிகள் ஆபாச நடனமாட கட்டாயப்படுத்தப்படுவதாக, தொண்டு நிறுவனம் ஒன்றிடமிருந்து வந்தத் தகவலைத் தொடர்ந்து இந்த மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
பிகாரின் மார்சாக் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உதவியுடன் சிறப்புக் குழு அமைக்கப்பட்டு, சிறுமிகள் மீட்கப்பட்டனர்.
மீட்கப்பட்ட சிறுமிகள் குழந்தைகள் நல வாரியத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கான உளவியல் ஆலோசனைகள் மற்றும் மறுவாழ்வுக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
மீட்கப்பட்ட சிறுமிகளில், 6 பேர் மார்சாக் பகுதியைச் சேர்ந்தவர்கள். 7 பேர் பானபூர், 4 பேர் இஸுவாபூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. குழந்தைகள் கடத்தலில் ஈடுபட்டவர்கள் குறித்து விரிவான விசாரணை நடத்த வலியுறுத்தப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட சிறுமிகளுக்கு குழந்தைகள் பாதுகாப்புச் சட்டம் 2015, பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாத்தல் சட்டம் 2012, குழந்தைகளுக்கான கட்டாயம் மற்றும் இலவசக் கல்விச் சட்டம் 2009 ஆகியவற்றை குழந்தைகளின் உரிமை பாதுகாப்பு தேசிய ஆணையம் உறுதி செய்யும் எனத் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க | தனிநபர் வருவாய் குறித்து பிரதமர் பேசாதது ஏன்? காங்கிரஸ்