தோட்டாக்களுடன் துப்பாக்கிகள் வைத்திருந்ததாக திமுக நகர மன்ற உறுப்பினர் உள்ளிட்ட இருவர் கைது!
அரக்கோணம்: தோட்டாக்களுடன் இரண்டு துப்பாக்கிகள் வைத்திருந்ததாக திமுகவைச் சேர்ந்த அரக்கோணம் நகரமன்ற உறுப்பினர் உள்ளிட்ட இருவரை போலீஸார் கைது செய்து அவர்களிடமிருந்து இரண்டு துப்பாக்கிகள், 4 தோட்டாக்கள் மற்றும் ஒரு இருசக்கர வாகனம் ஆகியவற்றையும் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
அரக்கோணம் நகர காவல் நிலைய போலீஸார் அரக்கோணத்தை அடுத்துள்ள மங்கம்மா பேட்டையில் உள்ள ரயில்வே மேம்பாலம் அருகே இன்று வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் ஒருவரிடம் இரு துப்பாக்கிகளும் 4 தோட்டாக்களும் இருந்தது தெரிய வந்தது. உடனே வாகனங்களுடன் துப்பாக்கிகள் தோட்டாக்களை பறிமுதல் செய்த போலீஸார் இருவரையும் கைது செய்தனர். அவர்கள் அரக்கோணம் நேருஜி நகரை சேர்ந்த கே.எம். பாபு(37) மற்றொருவர் அரக்கோணம் ஜோதி நகரைச் சேர்ந்த திணேஷ் குமார்(32) என்பது தெரிய வந்துள்ளது.
கைது செய்யப்பட்ட கே எம் பாபு, அரக்கோணம் நகர மன்ற ஆறாவது வார்டு உறுப்பினராக திமுக சார்பில் தேர்வு செய்யப்பட்டு, தற்போது அப் பதவியில் இருந்து வருகிறார். இவர்களிடமிருந்து ஒரு ஏர்கன், ஒரு ரிவால்வர் இரு துப்பாக்கிகளும் மற்றும் 4 தோட்டாக்களும் அவர்கள் வந்த இருசக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
பாபு போலீஸாரிடம் அளித்த வாக்குமூலத்தில் தனக்கு தினேஷ்குமார் ரூ.30 ஆயிரத்திற்கு ஒரு ஏர்கன் ஒரு ரிவால்வர் ஆகியவற்றை வாங்கிக் கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
துப்பாக்கிகளை கொடுக்கும் போது தனக்கு 4 தோட்டாக்களையும் கொடுத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த விஷயத்தில் போலீசார் தினேஷ் குமாரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்ற நிலையில், இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 17ஆம் தேதி அரக்கோணம் பழைய பேருந்து நிலையத்தில், நகர மன்ற உறுப்பினர் கே எம் பாபுவை 4 பேர் கத்தியால் வெட்டியதும், இச்சம்பவத்தில் கே எம் பாபு அவரின் தந்தையார் மணி உள்ளிட்ட 4 பேர் படுகாயம் அடைந்ததும், இது தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: அப்பல்லோ மைக்ரோ சிஸ்டம்ஸ் நிகர லாபம் 8% அதிகரிப்பு!