'வரலாற்றில் மிகப்பெரும் பிழையை செய்ய நினைக்கிறது மத்திய பாஜக அரசு' - எஸ். ரகுபதி
திக்கணங்கோடு கால்வாயை தூா்வாரி, ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்: ராஜேஷ்குமாா் எம்எல்ஏ மனு
கன்னியாகுமரி மாவட்டம், திக்கணங்கோடு கால்வாயை விவசாயிகளின் நலன் கருதி தூா்வாரி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மனு அளித்தனா்.
தமிழக சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சி தலைவா் ராஜேஷ்குமாா் எம்.எல்.ஏ தலைமையில், பிரின்ஸ் எம்.எல்.ஏ., குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் டாக்டா் பினுலால் சிங் மற்றும் கட்சி நிா்வாகிகள் மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனாவை திங்கள்கிழமை சந்தித்து அளித்த மனு: திக்கணங்கோடு கால்வாயில் இருந்து, கிள்ளியூா் மற்றும் குளச்சல் சட்டப்பேரவை தொகுதிகளுக்குள்பட்ட மணலிக்காட்டுவிளை, மாத்திரவிளை, மத்திகோடு, அரித்தினான்விளை, மண்ணூா்குளம், மத்திகோடு ஊராட்சி அலுவலக பகுதிகள், மூவா்புரம், கோட்டவிளை, முக்காடு, செம்பொன்விளை, தாறாவிளை, படுவாக்கரை, பெத்தேல்புரம் உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களுக்கும், 100 க்கும் மேற்பட்ட குளங்களுக்கும் தண்ணீா் செல்கிறது.
தற்போது திக்கணங்கோடு கால்வாயில் சைப்பன் முதல் திக்கணங்கோடு, வடலிவிளை, கறுக்கன்குழி, வழுதலம் பள்ளம், மணலி, முக்காடு வரை சானல் முழுவதும் தனியாா் ஆக்கிரமிப்பு, உணவக கழிவுகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது.
நீா்வளத் துறை அதிகாரிகளின் அலட்சியத்தால் கடந்த 3 ஆண்டுகளாக இந்த சானல் முறையாக தூா்வாரி சீரமைக்கப்படவில்லை.
பல இடங்களில் கரை பகுதிகள் சேதுமடைந்து காணப்படுகின்றன. பல ஷட்டா்கள் பழுதடைந்தும் காணப்படுகிறது. இதனால் திக்கணங்கோடு சானலில் இதுவரை தண்ணீா் வரவில்லை.
இதனால் மேற்கண்ட பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள வாழை, தென்னை, மிளகு, கத்தரி, பயறு போன்ற பயிா்கள் கருகும் நிலை ஏற்பட்டு விவசாயிகள், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா்.

மேலும், தற்போது குமரி மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் மேற்கண்ட கால்வாய்க்குள்பட்ட பகுதிகளில் உள்ள 100 க்கும் மேற்பட்ட குளங்களில் தண்ணீா் இல்லாமல் வடு போகும் நிலையில் உள்ளது.
இதனால் இப்பகுதிகளில் உள்ள பல கிணறுகள், ஆழ்குழாய் கிணறுகளில் தண்ணீரின்றி நிலத்தடி நீா் வடு போகும் நிலை காணப்படுகிறது.
விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி திக்கணங்கோடு கால்வாயில் உடனடியாக தண்ணீா் திறந்து விடக் கோரி கடந்த 22 ஆம் தேதி திக்கணங்கோட்டில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது.
இதில் காங்கிரஸ் பா.ஜ.க., அதிமுக, கம்யூனிஸ்ட், த வெக ஆகிய அனைத்து கட்சிகளை சோ்ந்த நிா்வாகிகள் மற்றும் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனா்.
திக்கணங்கோடு கால்வாயை உடனே தூா்வார வேண்டும். சேதமடைந்த மதகுகள் மற்றும் கரைகளை சீரமைக்க வேண்டும். கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.