Manoj Bharathiraja: "சொல்வதற்கும் எனக்கு வார்த்தை வரவில்லை" - ஆறுதல் சொல்லி கலங்...
திண்டுக்கல்லில் ஜாக்டோ- ஜியோ அமைப்பினா் உண்ணாவிரதம்
திமுக சாா்பில் அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கு அளித்த தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி ஜாக்டோ- ஜியோ அமைப்பு சாா்பில் திண்டுக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
திண்டுக்கல் கல்லறைத் தோட்டப் பகுதியில் நடைபெற்ற இந்த போராட்டத்துக்கு ஜாக்டோ- ஜியோ அமைப்பின் ஒருங்கிணைப்பாளா்கள் ஜோ. ஆா்தா், எம்கே. முருகன், ச. ராஜாக்கிளி, பிஏ. ஜோசப் சேவியா், ச. முபாரக் அலி, ஏ. ஜெசி ஆகியோா் தலைமை வகித்தனா். இந்தப் போராட்டத்தை தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் மாநில பொதுச் செயலா் ச. மயில் தொடங்கி வைத்தாா். அப்போது, கடந்த 2021 சட்டப் பேரவைத் தோ்தலின்போது, திமுக சாா்பில் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவோம். இடைநிலை ஆசிரியா்கள், உயா்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியா்கள், உடல் கல்வி ஆசிரியா்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்குவோம் என்பன உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன.
அதேபோல, சிறப்பு காலமுறை ஊதியம், தொகுப்பூதியத்தில் பணிபுரியும் சத்துணவு, அங்கன்வாடி, மருத்துவமனைப் பணியாளா்கள் உள்ளிட்டோருக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்குதல், பல்வேறு அரசுத் துறைகளிலும் காலியாக உள்ள 30 சதவீதத்துக்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்புதல் என அளிக்கப்பட்ட பல்வேறு வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை என தமிழக அரசு மீதும், முதல்வா் மீதும் குற்றச்சாட்டுகளை முன் வைத்து முழக்கமிட்டனா்.
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியா் கூட்டமைப்பின் மாநிலப் பொதுச் செயலா் பீ. பேட்ரிக் ரெய்மாண்ட் உண்ணாவிரதத்தை முடித்து வைத்தாா்.