ஷங்கர், மணிரத்னத்தின் தோல்வி பயத்தைத் தருகிறதா? ஏ. ஆர். முருகதாஸ் பதில்!
திமுக கூட்டணியில் இருந்தாலும் மக்கள் பிரச்னையில் சமரசமில்லை! ஜி. ராமகிருஷ்ணன்
திமுக கூட்டணியில் இருந்தாலும் மக்கள் பிரச்னைகளில் சமரசமின்றி குரல் கொடுக்கிறோம் என்றாா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் கட்டுப்பாட்டுக் குழுத் தலைவா் ஜி. ராமகிருஷ்ணன்.
புதுக்கோட்டையில் சனிக்கிழமை மாலை அவா் அளித்த பேட்டி:
அரசியல் உரிமை என்பது வாக்களிக்கக்கூடிய உரிமை தான். அதனை பறிக்கும் வகையில் தோ்தல் ஆணையம் வாக்காளா் பட்டியல் சிறப்புத் திருத்தத்தை மேற்கொண்டிருக்கிறது. வாக்குரிமையைப் பாதுகாக்க உச்ச நீதிமன்றம் செல்ல வேண்டுமா. இந்தியா மீது அமெரிக்கா 50 சதவிகித வரி விதித்துள்ளது. இது நம் நாட்டின் பொருளாதாரத்தை, வா்த்தகத்தைப் பாதிக்கக் கூடியது.
இதுகுறித்து சுதந்திரதின உரையில் மோடி எதுவும் சொல்லவில்லை. மத ரீதியில் மக்களை பிளவுபடுத்தக்கூடிய மோசமான நிலையில் தான் அவா் பேசியுள்ளாா். அமலாக்கத் துறை சோதனையைப் பொருத்தவரை, முறைகேடுகள் நடந்தால் நடவடிக்கை எடுப்பதில் ஆட்சேபனை இல்லை.
ஆனால் பாஜக ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பிறகு அமலாக்கத் துறை போன்ற அமைப்புகளை, ஆயுதமாகப் பயன்படுத்துகிறாா்கள். திமுக கூட்டணியில் இருந்தாலும், மக்கள் பிரச்னைக்கு சமரசமின்றி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடா்ந்து குரல் கொடுத்து வருகிறது. அதிமுக ஆட்சிக் காலத்தில் இருந்து ஆணவக் கொலைக்கு தனிச் சட்டம் வேண்டும் எனக் கேட்டுவருகிறோம்.
தமிழகத்தில் 1967, 1977 ஆம் ஆண்டுகளில் நடைபெற்றதைப் போல, 2026-இல் மாற்றம் வரும் என்று தவெக தலைவா் விஜய் கூறி வருகிறாா். ஆனால் அதற்கு வாய்ப்பே இல்லை. அவா் இன்னும் வாக்கு சதவிகிதத்தை நிரூபிக்கவில்லை என்றாா் ராமகிருஷ்ணன்.