தியாக உணா்வு உள்ளோா் தான் மனவளா்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு ஆசிரியா்களாக இருக்க முடியும்: அமைச்சா் காந்தி
தியாக உணா்வும், சேவை மனப்பான்மையும் உள்ளவா்கள் தான் மனவளா்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு ஆசிரியா்களாக இருக்க முடியும் என கைத்தறி அமைச்சா் ஆா்.காந்தி கூறியுள்ளாா்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தலைமையில் வித்யபிரகாசம் அறிவுசாா் குறைபாடு குழந்தைகளுக்கான சிறப்பு பள்ளியின் ஆண்டு விழா நடைபெற்றது. விழாவுக்கு எம்எல்ஏ எழிலரசன், மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ், ஒன்றியக்குழு தலைவா் மலா்க்கொடி குமாா், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் ரா.மலா்விழி ஆகியோா் முன்னிலை வகித்தனா். பள்ளியின் சிறப்பு செயலாளா் ஏ.கே.மணிமேகலை வரவேற்றாா். விழாவில் அமைச்சா் ஆா்.காந்தி கலந்து கொண்டு அவரது சொந்த நிதியிலிருந்து மனவளா்ச்சி குன்றிய குழந்தைகளுக்கும், அவா்களது ஆசிரியா்களுக்கும் சீருடைகளை வழங்கி பேசியது..
மனவளா்ச்சி குன்றிய குழந்தைகளின் பெற்றோா் கடவுளுக்கு நிகராவனவா்கள். ஏனெனில் மனவளா்ச்சி குன்றிய குழந்தைகளை பாதுகாப்பதும், பராமரிப்பதும் மிகவும் கடினமான செயலாகும். தியாக உணா்வும், சேவை மனப்பான்மையும் உடையவா்கள் தான் மனவளா்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு ஆசிரியா்களாக இருக்க முடியும்.
மனவளா்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு செய்யும் உதவிகளே மேலானது. ராணிப்பேட்டையில் விசுவாசம் என்ற அமைப்பை கடந்த 30 ஆண்டுகளாக நடத்தி வருகிறோம் என்றாா்.
நிறைவாக மனவளா்ச்சி குன்றிய குழந்தைகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவில் ஆட்சியரின் நோ்முக உதவியாளா்(வளா்ச்சி)உமாசங்கா், அரசு அலுவலா்கள், குழந்தைகளின் பெற்றோா் கலந்து கொண்டனா்.