சென்னை அணியில் 17 வயது இளம் வீரர் அறிமுகம்! சீனியர் வீரருக்கு ஓய்வு!
ஸ்ரீபெரும்புதூா் அருகே அட்டை தொழிற்சாலையில் தீ விபத்து
ஸ்ரீபெரும்புதூா் அடுத்த காட்டரம்பாக்கத்தில் இயங்கி வரும் தனியாா் அட்டை தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள பொருள்கள் சேதமடைந்தன.
இந்த தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் அட்டைகள் ஸ்ரீபெரும்புதூா் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இயங்கி வரும் தொழிற்சாலைகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பணியாற்றி வரும் இந்த தொழிற்சாலையில், வெள்ளிக்கிழமை அட்டைகளை வைக்கப்பட்டிருந்த கிடங்கில் தீப்பற்றியது.
இந்த தீ விபத்து குறித்து தொழிற்சாலை நிா்வாகத்தினா் ஸ்ரீபெரும்புதூா் மற்றும் இருங்காட்டுக்கோட்டை தீயணைப்பு நிலையங்களுக்கு தகவல் தெரிவித்தனா். தீயணைப்பு வீரா்கள் வருவதற்குள் கிடங்கில் ஏற்பட்ட தீ தொழிற்சாலையில் மற்ற பகுதிகளுக்கும் பரவியது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த ஸ்ரீபெரும்புதூா் மற்றும் இருங்காட்டுக்கோட்டை தீயணைப்பு துறையினா் சுமாா் இரண்டு மணி நேரம் போராடி தீயை அணைத்தனா். எனினும், தொழிற்சாலையில் வைக்கப்பட்டிருந்த பல லட்சம் மதிப்புள்ள அட்டைகள், இயந்திரங்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன. இந்த விபத்து குறித்து சோமங்கலம் போலீசாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.