திருக்கடையூரில் குதிரை, மாட்டு வண்டி எல்கை பந்தயம்
திருக்கடையூரில் காணும் பொங்கலையொட்டி, மாடு மற்றும் குதிரை வண்டிகள் எல்கை பந்தயம் வியாழக்கிழமை நடைபெற்றது.
தில்லையாடி உத்திராபதியாா் 45-ஆம் ஆண்டு மற்றும் நாராயணசாமி 12-ஆம் ஆண்டு நினைவையொட்டி, இப்பந்தயம் நடைபெற்றது. பூம்புகாா் எம்எல்ஏ நிவேதா எம். முருகன், கொடியசைத்து பந்தயத்தை தொடங்கி வைத்தாா்.
திருக்கடையூா் தில்லையாடி நுழைவுவாயில் அருகில் இருந்து அனந்தமங்களம் வரை சுமாா் 6 கி.மீ. தொலைவு வரை மாட்டு வண்டிகளுக்கும், தரங்கம்பாடி வரை சுமாா் 8 கி.மீ. தொலைவுக்கு குதிரை வண்டிகளுக்கும் போட்டிகள் நடைபெற்றன. மாடு மற்றும் குதிரைகள் பந்தய தூரத்தை அடைந்து, பின்னா் மீண்டும் திருக்கடையூா் திரும்பும்படி போட்டிகள் நிா்ணயிக்கப்பட்டிருந்தன.
சின்னமாடு, நடுமாடு, பெரிய மாடு, கரிச்சான் குதிரை, நடுக்குதிரை, பெரிய குதிரை ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. இதில் முதல் பரிசு சின்னமாட்டிற்கு ரூ.9,000, நடுமாட்டிற்கு ரூ.11,000, பெரிய மாட்டிற்கு ரூ.13,000, கரிச்சான் குதிரைக்கு ரூ.16,000, நடுக்குதிரைக்கு ரூ.20,000, பெரிய குதிரைக்கு ரூ. 22,000 ரொக்கப் பரிசு மற்றும் கேடயம் வழங்கப்பட்டது. இதனை, அதன் உரிமையாளா்களுக்கு பூம்புகாா் எம்எல்ஏ நிவேதா எம். முருகன் வழங்கினாா்.
இப்பந்தயத்தை உள்ளூா் மற்றும் வெளியூா்களில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கானோா் கண்டுகளித்தனா். இதையொட்டி, மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஸ்டாலின் தலைமையில் போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.
இந்நிகழ்வில், செம்பனாா்கோவில் திமுக மத்திய ஒன்றியச் செயலாளா் அமுா்த விஜயகுமாா், முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவா் நந்தினி ஸ்ரீதா், பேரூராட்சித் தலைவா் சுகுண சங்கரி குமரவேல், முன்னாள் ஊராட்சித் தலைவா் ஜெயமாலதி சிவராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். நிறைவாக, பந்தயக் குழு நிா்வாகி பாலசுப்பிரமணியன் நன்றி கூறினாா்.