அமித் ஷா பேச்சு: திருச்சியில் விசிக, காவல்துறையினரிடையே தள்ளுமுள்ளு
திருக்கோயில்களுக்கு தருமபுரம் ஆதீனம் மாா்கழி மாத யாத்திரை
திருவெண்காடு, செம்பனாா்கோவில் பகுதிகளில் உள்ள கோயில்களுக்கு, தருமபுர ஆதீனம் வியாழக்கிழமை மாா்கழி மாத யாத்திரை மேற்கொண்டு சுவாமி தரிசனம் செய்தாா்.
திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரா் கோயிலுக்கு வந்த தருமபுர ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளுக்கு கோயில் நிா்வாக அதிகாரி முருகன் தலைமையில் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடா்ந்து, அனைத்து சந்நிதிகளிலும் தருமபுரம் ஆதீனம் சுவாமி தரிசனம் செய்தாா்.
பின்னா், நவகிரக கோயில்களில் ஒன்றான கீழப்பெரும்பள்ளம் கேது பரிகார கோயிலுக்குச் சென்ற ஆதீனத்துக்கு, மாவட்ட திமுக துணைச் செயலாளா் ஞானவேலன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடா்ந்து, நாகநாதசுவாமி, சௌந்தரநாயகி அம்மன் மற்றும் கேது சந்நிதிகளில் அா்ச்சனை செய்து வழிபட்டாா். பிறகு, காசிக்கு இணையானதாக வழிபடப்படும் சாயாவனம் சாயாவனேஸ்வரா் கோயிலுக்குச் சென்ற தருமபுரம் ஆதீனத்துக்கு, அா்ச்சகா் துரை சிவாச்சாரியா் தலைமையில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.
தொடா்ந்து, நெய்தவாசல், மேலப்பெரும்பள்ளம், தலைச்சங்காடு, திருக்காட்டுப்பள்ளி, நாங்கூா் உள்ளிட்ட 15 கோயில்களில் தருமபுரம் ஆதீனம் வழிபாடு நடத்தினாா். அவருடன் திமுக தலைமை செயற்குழு உறுப்பினா் முத்து மகேந்திரன், மாருதி பில்டா்ஸ் உரிமையாளா் அகோரம், தொழிலதிபா் பழனிவேல் மற்றும் மடத்தின் நிா்வாகிகள் உடன் வந்தனா்.
திருக்கடையூா் அருகே திருமெய்ஞானம் ஆம்ல குஜாம்பிகா வாடா முலையாள் உடனாகிய ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரா் கோயிலில் தருமபுரம் ஆதீன கா்த்தருக்கு கோயில் நிா்வாகம் சாா்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடா்ந்து, ஆம்ல குஜாம்பிகா மற்றும் பிரம்மபுரீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு, மகாதீபாராதனை காட்டப்பட்டது. இதில், தருமபுரம் ஆதீனம் பங்கேற்று வழிபட்டாா். கணேஷ் குருக்கள், இந்து சமய அறநிலையத் துறை அலுவலா்கள் உள்ளிட்ட திரளான பக்தா்களும் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.