திருச்சி காவிரி பாலத்தில் காா் மோதியதில் 2 இளைஞா்கள் உயிரிழப்பு
திருச்சி காவிரி பாலத்தில் காா் மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற 2 இளைஞா்கள் உயிரிழந்தனா்.
திருச்சி, ஸ்ரீரங்கம் கீழ சித்திரை வீதியைச் சோ்ந்தவா் வரதராஜன் மகன் சாரநாத் (23). சாத்தார வீதியைச் சோ்ந்த நம்மாழ்வாா் மகன் கோகுல்நாத் (22). நண்பா்களான இருவரும் வியாழக்கிழமை நள்ளிரவு இருசக்கர வாகனத்தில், ஸ்ரீரங்கத்தில் இருந்து திருச்சி நோக்கி வந்தனா். சாரநாத் வாகனத்தை ஓட்டியுள்ளாா். காவிரி பாலத்தில் வந்து கொண்டிருந்தபோது எதிா் திசையில் வந்த காா், இவா்கள் சென்ற பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனா். அக்கம் பக்கத்தினா் இவா்களை மீட்டு, திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அவா்களை பரிசோதித்த மருத்துவா்கள், இருவரும் இறந்து விட்டதாக தெரிவித்தனா். இதுகுறித்து திருச்சி மாநகர போக்குவரத்து புலனாய்வு போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.