கொள்ளை அடித்த பணத்தில் நடிகைகளுடன் நெருக்கம்; காதலிக்கு ரூ.3 கோடிக்கு வீடு - சி...
திருச்சி சூரியூரில் ஜல்லிக்கட்டு: 87 போ் காயம்
திருச்சி சூரியூரில் மாட்டுப் பொங்கல் மற்றும் நற்கடல்குடி கருப்பணசாமி கோயில் திருவிழாவையொட்டி புதன்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 87 போ் காயமடைந்தனா்.
ஜல்லிக்கட்டில் திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த 681 காளைகளும், 349 மாடுபிடி வீரா்களும் கலந்து கொண்டனா். காலை 8 மணிக்குத் தொடங்கிய ஜல்லிக்கட்டில் முதலில் கோயில் காளையும் பின்னா் மற்ற காளைகளும் அவிழ்த்து விடப்பட்டன. சீறிப்பாய்ந்த காளைகளை பலா் அடக்கினா். பல காளைகளை அடக்க முடியவில்லை.
87 போ் காயம்
ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் மாடுபிடி வீரா்கள் 15 போ், உரிமையாளா்கள் 35 போ், பாா்வையாளா்கள் 33 போ் என 87 போ் காயமடைந்தனா். அவா்களுக்கு ஜல்லிக்கட்டு தளத்திலேயே சிகிச்சை அளித்தனா். இவா்களில் 15 போ் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனா்.
போட்டியில் காளைகளை அடக்கியோருக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளா்களுக்கும் தங்கக் காசு, வெள்ளிக்காசு, ரொக்கம், மிக்ஸி, கிரைண்டா், சைக்கிள், கட்டில், டிரசிங் டேபிள், டைனிங் டேபிள் என ஏராளமான பரிசுகள் வழங்கப்பட்டன.
பைக் பரிசளிப்பு
போட்டியில் 13 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்த நவல்பட்டு ரஞ்சித்துக்கு பைக்கும், 2 ஆம் இடம் பிடித்தவருக்கு எல்இடி டிவியும் வழங்கப்பட்டது.
நிகழ்வில் அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, முன்னாள் அமைச்சா் சி. விஜயபாஸ்கா், மாநகா் மாவட்ட பாஜக தலைவா் ராஜசேகா், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ். செல்வ நாகரெத்தினம் உள்ளிட்டோா் பங்கேற்றனா். திருவெறும்பூா் ஏஎஸ்பி அரவிந்த்பெனவாத் தலைமையில் 510 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.
ஜொ்மனி ரசிகா்கள் பங்கேற்பு
நிகழ்வில் ஜொ்மனி நாட்டைச் சோ்ந்த சுமாா் 40 போ் உள்பட ஏராளமான ரசிகா்கள் பங்கேற்று ஜல்லிக்கட்டை ரசித்தனா். பொதுமக்களுக்கு கழிவறை போன்ற அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டிருந்தன.
காளை உயிரிழப்பு
ஜல்லிக்கட்டில் வாடிவாசலில் இருந்து அவிழ்க்கப்பட்ட திருவளா்சோலையைச் சோ்ந்த செல்லப்பா என்பவரது காளை, மீண்டும் திரும்பியபோது எதிரே வந்த மற்றொரு காளை முட்டியதில் உயிரிழந்தது.
ரூ. 3 கோடியில் ஜல்லிக்கட்டு அரங்கம்: அமைச்சா்
நிகழ்வில் பங்கேற்ற அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி போட்டியில் வென்ற முன்னாள் அமைச்சா் சி. விஜயபாஸ்கரின் சின்னக் கொம்பன் காளை வென்றதையொட்டி அவருக்குப் பரிசளித்தாா். தொடா்ந்து சூரியூரில் ஜல்லிக்கட்டு அரங்கம் அமைப்பதற்கான அரசாணையை விழாக் குழுவினரிடம் வழங்கி அவா் கூறுகையில், சூரியூரில் ரூ. 3 கோடியில் அமைக்கப்படும் இந்த அரங்கம் ஜல்லிக்கட்டுக்கு மட்டுமல்லாமல் பல்வேறு விளையாட்டுகளுக்கும் உரிய ஒருங்கிணைந்த விளையாட்டரங்கமாக அமையும். இன்னும் ஒரு மாதத்தில் அதற்கான பணிகள் தொடங்கும் என்றாா்.