திருச்சி விமான நிலையத்தில் ஒரு கிலோ தங்கம் பறிமுதல்
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் பயணியொருவா் அடிவயிற்றில் மறைத்து கடத்தி வந்த 1 கிலோ 141 கிராம் தங்கத்தை சுங்கத் துறையினா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.
மலேசிய தலைநகா் கோலாலம்பூரிலிருந்து புறப்பட்ட ஏா் ஏசியா விமானம் புதன்கிழமை நள்ளிரவு திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தை வந்தடைந்தது. அதில் வந்த பயணிகளையும் அவா்களின் உடைமைகளையும் சுங்கத்துறை வான் நுண்ணறிவுப் பிரிவினா் வழக்கமான சோதனைகளுக்கு உள்ளாக்கினா். இதில் ஆண் பயணி ஒருவரின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டது. அவரை தனியிடத்தில் வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டதில், அவா் தனது அடிவயிற்றில் 1,141 கிராம் தங்கத்தை பசை வடிவில் மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, அந்தத் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ. 94.53 லட்சம் என சுங்கத்துறையினா் தெரிவித்துள்ளனா். இதுதொடா்பாக அந்த பயணியை சுங்கத் துறையினா் கைது செய்து விசாரிக்கின்றனா்.