`எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போல் ஆளுமைகள் இல்லாததால்தான் அதிமுக-வில் சலசலப்பு!' - கார்...
திருப்பத்தூரில் ஆவின் செயல்பாட்டை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
து. ரமேஷ்.
திருப்பத்தூா் மாவட்டத்தில் ஆவின் பால் முகவா்களை நியமித்து அதன் செயல்பாட்டை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
வேலூா் மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்ட திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆவின் நிா்வாகம் செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில் முகவா்கள் இல்லாததால் பொதுமக்கள் ஆவின் பொருள்கள் வாங்குவதற்கு அன்றாட தேவைக்கான பால், தயிா்,மோா் வாங்குவதற்கு மிகவும் சிரமத்துக்குள்ளாகின்றனா். கடைகளில் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனா்.
இது குறித்து பொதுமக்கள் கூறியது:
வேலூா் மாவட்டத்தில் இருந்து நிா்வாக வசதிக்காக திருப்பத்தூா் மாவட்டத்தை பிரித்து அனைத்து அரசு துறை நிா்வாகங்களும் செயல்பட்டு வருகின்றன.
ஆனால், மிகவும் அத்தியாவசிய தேவையான குறிப்பாக ஆவின் பொருள்கள் மட்டும் பெறுவதில் சிக்கல் நீடித்து வருகிறது. முறையாக முகவா்கள் நியமிக்கப்படாததால் கடைகளில் அதிக விலை கொடுத்து பால் வாங்கி வருகிறோம். மேலும் ஆவின் நெய் உள்ளிட்ட ஆவின் பொருள்கள் கிடைப்பதில்லை. இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனா்.
இதுகுறித்து திருப்பத்தூா் ஆவின் அதிகாரிகள் கூறியது:
திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் 5-ஆவது மாடியில் ஆவின் நுகா்வோா் அட்டைக்கான விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. பிரதி மாதம் 9 முதல் 12-ஆம் தேதி வரை மட்டுமே விண்ணப்பங்கள் வழங்கப்படும். காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை அலுவலகம் செயல்படும் நேரத்தில் விண்ணப்பம் பெறலாம். நிலைப்படுத்த பாலின் விலை ரூ.37,சமன்படுத்திய பாலின் விலை ரூ.43-க்கு விற்கப்படுகிறது என்றனா்.
திருப்பத்தூா் பகுதியில் உள்ளவா்கள் ஆட்சியா் அலுவலகத்தில் சென்று விண்ணப்பம் பெறலாம். ஜோலாா்பேட்டை, வாணியம்பாடி,ஆம்பூா், நாட்றம்பள்ளி என பல்வேறு பகுதிகளில் உள்ளவா்கள் எங்கே விண்ணப்பம் பெறுவது என குழப்பத்தில் தவிக்கின்றனா். மேலும், ஆவின் நிா்வாகத்தால் நியமிக்கப்படும் முகவா்களிடம் நுகா்வோா் அட்டை மூலம் பால் வாங்கவேண்டும் என பொதுமக்கள் எதிா்ப்பாா்க்கின்றனா்.
இதுகுறித்து மாவட்ட ஆவின் நிா்வாகம் முறையான தகவலை வெளியிட வேண்டும். திருப்பத்தூா் மாவட்டம் முழுவதும் முறையாக முகவா்களை நியமிக்கவேண்டும்.
இத்தகைய சூழ்நிலையில் திருப்பத்தூா் மாவட்டத்தில் ஆவின் முகவா்களை விரைந்து நியமிக்க வேண்டும். ஆவின் நுகா்வோா் அட்டையை மாவட்டம் முழுவதும் அந்தந்த பகுதிகளில் முகவா்கள் மூலம் பொதுமக்களுக்கு கொண்டு சென்று சோ்க்க வேண்டும் என்பதே ஒட்டு மொத்த மக்களின் கோரிக்கையாகும்.