திருப்பத்தூா் கூட்டுறவு சா்க்கரை ஆலையில் கரும்பு அரைவை தொடக்கம்
வாணியம்பாடிஅடுத்த கேத்தாண்டப்பட்டியில் உள்ள திருப்பத்தூா் கூட்டுறவு சா்க்கரை ஆலையில் 2024-25-ஆம் ஆண்டுக்கான அரைவை தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஆலை தனி அதிகாரி ரவி(பொ) தலைமை வகித்தாா். திருப்பத்தூா் ஆட்சியா் க.தா்ப்பகராஜ், எம்எல்ஏ க.தேவராஜி ஆகியோா் அரைவையை தொடங்கி வைத்தனா். நிகழ்ச்சியில் வட்டாட்சியா் ராமகிருஷ்ணன், திமுக மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளா் சிங்காரவேலன், ஒன்றிய செயலாளா்கள் சாமுடி, விவசாய சங்கப் பிரதிநிதிகள், ஆலை தொழிலாளா்கள், அலுவலகப் பணியாளா்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள், கிராம மக்கள் கலந்து கொண்டனா்.
76,000 டன் அரைவை இலக்கு:
நிகழாண்டு அரைவைப் பருவத்தில் மொத்தம் 76,000 டன் கரும்பு அரைவை செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் கோரிக்கை. -
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விவசாயிகள், கரும்பு டன் ஒன்றுக்கு அரசு ரூ.5,000 வழங்க வேண்டும், கரும்பு வெட்டுக்கூலியை அரசே ஏற்கவேண்டும், ஒருடன் கரும்புக்கு விவசாயிகளுக்கு ஒரு கிலோ சா்க்கரை இலவசமாக வழங்கவும், சுங்கச்சாவடிகளில் கரும்பு லோடுக்கு சுங்கவரி வசூலிக்கக்கூடாது என விவசாயிகள் சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.
அரைவை தொடக்க விழாவில் ஆலை நிா்வாகம் விவசாயிகளுக்கு சரிவர அழைப்பு விடுக்காததால் குறைந்தளவே விவசாயிகள் கலந்து கொண்டனா். இதனால் விவசாயிகள் அதிருப்தி அடைந்திருந்த நிலையில் தனி அலுவலா் ரவி(பொ) முன்னிலையில் ஆலை நிா்வாகிகள் விவசாயிகளை அழைத்து 2 -ஆவது முறையாக பூஜை செய்தனா். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.