அம்பேத்கர் குறித்து அமித் ஷா பேச்சு: விழுப்புரத்தில் ரயிலை மறித்து விசிகவினர் போராட்டம்
விழுப்புரம்: அம்பேத்கா் குறித்து மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து விழுப்புரம் தெற்கு மாவட்ட விசிகவினர் ரயிலை மறித்து வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாடாளுமன்றத்தில் பேசிய உள்துறை அமைச்சா் அமித் ஷா, அம்பேத்கா் பெயரை எதிா்க்கட்சியினா் உச்சரிப்பதற்குப் பதிலாக கடவுளின் பெயரைக் கூறியிருந்தால் சொா்க்கத்திலாவது இடம் கிடைத்திருக்கும் என்றாா்.
அம்பேத்கரை அவமதிக்கும் வகையில் அமித் ஷா பேசியதாகக் கூறி, அதற்கு கண்டனம் தெரிவித்து திமுக சாா்பில் தமிழகம் முழுவதும் ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இந்த நிலையில், அமித் ஷாவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து விழுப்புரம் தெற்கு மாவட்ட விசிகவினர் ரயிலை மறித்து வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிக்க |எதிலாவது அரசியல் செய்து பேர் எடுக்கத் துடித்துக் கொண்டிருக்கிறார் இபிஎஸ்: தங்கம் தென்னரசு
சென்னையிலிருந்து விழுப்புரம் வழியாக திருச்சி வரை செல்லும் சோழன் விரைவு ரயில் காலை 10.25 மணிக்கு வந்தது. 5 ஆவது நடைமேடைக்கு வந்த சோழன் விரைவு ரயிலை மாவட்டச் செயலர் இரா.பெரியார் தலைமையிலான விசிகவினர் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா மற்றும் மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
காலை 10.25 மணிக்குத் தொடங்கிய போராட்டம் காலை 10.35 மணிக்கு முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரை போலீஸார் கைது செய்தனர்.