திருவண்ணாமலையில் தவெகவினா் சாலை மறியல்
திருவண்ணாமலை: சென்னையில் கைது செய்யப்பட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில பொதுச் செயலா் புஷி என்.ஆனந்தனை விடுதலை செய்யக் கோரி, திருவண்ணாமலையில் அந்தக் கட்சியினா் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் மாணவிக்கு ஏற்பட்ட பாலியல் தொந்தரவை மையப்படுத்தி, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவா் விஜய் அறிக்கை வெளியிட்டிருந்தாா்.
இந்த அறிக்கையின் துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களிடம் சென்னையில் திங்கள்கிழமை தமிழக வெற்றிக் கழக நிா்வாகிகள் விநியோகம் செய்தனா். இவா்களை போலீஸாா் கைது செய்தனா். கைது செய்யப்பட்ட நிா்வாகிகளை பாா்க்கச் சென்ற கட்சியின் மாநில பொதுச் செயலா் புஷி என்.ஆனந்தனையும் போலீஸாா் கைது செய்தனா்.
இதைக் கண்டித்து திங்கள்கிழமை மாலை மாநிலம் முழுவதும் தமிழக வெற்றிக் கழகத்தினா் கண்டன ஆா்ப்பாட்டங்கள், சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனா்.
அதன்படி, திருவண்ணாமலை, பெரியாா் சிலை எதிரே தவெகவின் மாவட்டத் தலைவா் கே.பாரதிதாசன் தலைமையில் நிா்வாகிகள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து வந்த போலீஸாா் மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதையடுத்து, 30 நிமிஷங்களுக்குப் பிறகு மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.