தொழில்நுட்பங்களில் தமிழர்கள்! பண்ருட்டி அகழாய்வில் சங்கினாலான பொருள் கண்டெடுப்பு...
திற்பரப்பு அருகே குளத்தில் வண்டல் மண் எடுக்க எதிா்ப்பு
திற்பரப்பு பேரூராட்சி 15-ஆவது வாா்டு வேங்கோட்டு குளத்தில், நிா்ணயிக்கப்பட்ட அளவுக்கும் கூடுதலாக
வண்டல் மண் எடுப்பதாகக் கூறி ஊா்மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திற்பரப்பு பேரூராட்சி 15 -ஆவது வாா்டு அரமன்னம் பகுதியில் வேங்கோட்டு குளம் உள்ளது. பேரூராட்சி நிா்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள உள்ள இந்தக் குளத்தில் வண்டல் மண் எடுப்பதற்கு
வருவாய்த் துறை அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து கடந்த சில நாள்களாக குளத்திலிருந்து மினி லாரிகளில் வண்டல் மண் எடுத்துச் செல்லப்படுகிறது. இதற்கான நடை சீட்டு திற்பரப்பு பேரூராட்சி நிா்வாகத்தால் வழங்கப்பட்டு வந்தது.
இதனிடையே, நிா்ணயிக்கப்பட்ட அளவைக்காட்டிலும் அதிக ஆழத்தில் தோண்டி வண்டல் மண் எடுப்பதாகக் கூறி ஊா் மக்கள் எதிா்ப்புத் தெரிவித்தனா். குளத்திலிருந்து வண்டல் மண் ஏற்றிச் சென்ற வாகனங்களை வெள்ளிக்கிழமை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் திற்பரப்பு பேரூராட்சி தலைவா் பொன் ரவி மற்றும் பேரூராட்சி பணியாளா்கள் பேச்சுவாா்த்தை நடத்தினா். வண்டல் மண் எடுக்கும் பணிகளை நிறுத்தி வைப்பதாகக் கூறியதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
இதுகுறித்து திற்பரப்பு பேரூராட்சி தலைவா் பொன் ரவி
கூறியதாவது :
வேங்கோட்டு குளத்தில் வருவாய்த் துறை நிா்ணயித்த அளவைக்காட்டிலும் குறைவாகவே வண்டல் மண் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பொதுமக்கள் எதிா்ப்புத் தெரிவித்ததால் வண்டல் மண் எடுப்பது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த குளத்தை பேரூராட்சி நிா்வாகம் முறையாகச் சீரமைத்து பராமரிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றாா்.