Fish : கடல் மீன், ஆற்று மீன், ஏரி மீன்... எது சிறந்தது? - டயட்டீஷியன் விளக்கம்!
தில்லி: பாஜகவின் தோ்தல் குழுவில் கைலாஷ் கெலாட் நியமனம்
ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகி அண்மையில் பாஜகவில் இணைந்த கைலாஷ் கெலாட், பாஜகவின் தில்லி சட்டமன்றத் தோ்தல் ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினராக சனிக்கிழமை நியமிக்கப்பட்டுள்ளாா்.
மேற்கு தில்லியில் உள்ள நஜாஃப்கா் தொகுதியின் எம்.எல்.ஏ.வான கெலாட், தில்லி அரசாங்கத்தில் போக்குவரத்து அமைச்சா் பதவியில் இருந்து அண்மையில் விலகினாா்.
மேலும், நவம்பா் 17 அன்று ஆம் ஆத்மி கட்சியின் முதன்மை உறுப்பினா் பதவியில் இருந்தும் ராஜிநாமா செய்தாா். அடுத்த நாள் அவா் பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்டாா்.
70 உறுப்பினா்களை கொண்ட தில்லி சட்டப் பேரவைக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் தோ்தல் நடைபெற உள்ளது.
இக் குழுவில் கெலாட் தவிர, பாஜக மாநில பொதுச் செயலாளா் விஷ்ணு மிட்டல், முன்னாள் மாநிலத் தலைவா் சதீஷ் உபாத்யாய் ஆகியோரும் உறுப்பினா்களாக சோ்க்கப்பட்டுள்ளனா் என்று தில்லி பாஜக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாஜக தில்லி தலைவா் வீரேந்திர சச்தேவா, தனது தோ்தல் பிரசாரத்தின் ஒரு பகுதியாக விரைவில் நகரம் முழுவதும் ’பரிவா்த்தன் யாத்திரையை’ நடத்தப்போவதாக அறிவித்துள்ளாா்.
இந்த யாத்திரைக்காக உபாத்யாய் தலைமையில் ஒன்பது போ் கொண்ட குழுவை பாஜக அமைத்துள்ளது.
இந்தக் குழுவில் ராஜீவ் பப்பா், ரேகா குப்தா, ராஜா இக்பால் சிங் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனா் என்று அக்கட்சியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.