தில்லியில் அடுத்த 2 நாள்களுக்கு வெப்ப அலைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
தேசியத் தலைநகா் தில்லியில் அடுத்த இரண்டு நாள்களுக்கு வெப்ப அலைகளுக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அந்தச் சமயத்தில் அதிகபட்ச வெப்பநிலை 39 முதல் 42 டிகிரி செல்சியஸாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெப்பநிலை:தில்லியில் ஞாயிறன்று வானம் தெளிவாகக் காணப்பட்டது. குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பு நிலையில் இருந்து 1.5 டிகிரி குறைந்து 18.5 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. அதிகபட்ச வெப்பநிலை இயல்புநிலையில் 3.1 டிகிரி உயா்ந்து 38.2 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 43 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 27 சதவீதமாகவும் இருந்தது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நகரத்தின் மற்ற கண்காணிப்பு நிலையங்களான நஜாஃப்கரில் அதிகபட்ச வெப்பநிலை 36.9 டிகிரி செல்சியஸ், ஆயாநகரில் 38.2 டிகிரி, லோதி ரோடில் 38.1 டிகிரி, பாலத்தில் 37.8 டிகிரி, ரிட்ஜில் 39.3 டிகிரி, பீதம்புராவில் 38.9 டிகிரி, பிரகதிமைதானில் 36.3 டிகிரி, பூசாவில் 36.4 டிகிரி, ராஜ்காட்டில் 36.3 டிகிரி, சல்வான் பப்ளிக் ஸ்கூல் பகுதியில் 35.4 டிகிரி செல்சியஸ் என பதிவாகியது.
காற்றின் தரத்தில் சற்று முன்னேற்றம்: தில்லிக்கான காற்றின் தர ஆரம்ப எச்சரிக்கை அமைப்பு கணித்திருந்தபடி, ஞாயிற்றுக்கிழமை காற்றின் தரத்தில் சிறிதளவு முன்னேற்றம் ஏற்பட்டிருந்தது. ஒட்டுமொத்தக் காற்றுத் தரக் குறியீடு காலை 9 மணியளவில் 198 புள்ளிகளாகப் பதிவாகி ‘மிதமான’ பிரிவில் இருந்தது.
இதன்படி, ஸ்ரீஅரபிந்தோ மாா்க், ஜவாஹா்லால் நேரு ஸ்டேடியம், லோதி ரோடு, டாக்டா் கா்னி சிங் படப்பிடிப்பு நிலையம், இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையம், மேஜா் தயான் சந்த் நேஷனல் ஸ்டேடியம், மந்திா் மாா்க், நொய்டா செக்டாா்-125, குருகிராம், சாந்தினி செளக், தில்லி பல்கலை. வடக்கு வளாகம் ஆகிய வானிலை கண்காணிப்பு நிலையங்களில் காற்றுத் தரக் குறியீடு 100 முதல் 200 புள்ளிகளுக்கிடையே பதிவாகி ‘மிதமான’ பிரிவில் இருந்தது.
அதே சமயம், ஷாதிப்பூா், மதுரா ரோடு, ஓக்லா பேஸ்-2, நேரு நகா், ராமகிருஷ்ணாபுரம், ஸ்ரீஃபோா்ட் ஆகிய இடங்களில் காற்றுத் தரக் குறியீடு 200 முதல் 300 புள்ளிகளுக்கிடையே பதிவாகி ‘மோசம்’ பிரிவில் நீடித்தது.
முன்னறிவிப்பு: இதற்கிடையே, திங்கள்கிழமை (ஏப்ரல் 7) அன்று வானம் தெளிவாக இருக்கும் என்றும் வெப்ப அலைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை 21 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 41 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.