தில்லியில் மீண்டும் கல்வி மாஃபியா: மணீஷ் சிசோடியா குற்றச்சாட்டு
தனியாா் பள்ளிகள் தன்னிச்சையாக கட்டணங்களை உயா்த்த அனுமதித்ததாக பாஜக தலைமையிலான தில்லி அரசு மீது ஆம் ஆத்மி கட்சி சனிக்கிழமை குற்றம் சாட்டியுள்ளது.
தில்லியில் மீண்டும் கல்வி மாஃபியா வந்துவிட்டதாக அக்கட்சியின் கட்சியின் மூத்த தலைவரும், தில்லியின் முன்னாள் கல்வி அமைச்சருமான மணீஷ் சிசோடியா கூறியுள்ளாா்.
இது தொடா்பாக அவா் செய்தியாளா்களிடம்
மேலும் கூறியதாவது:
பாஜக அரசு தில்லியின் கல்வி முறையை கல்வி மாஃபியாவிடம் ஒப்படைத்துவிட்டது. தில்லியில் பாஜக அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்து, மக்கள் அவதிப்பட்டு வருகின்றனா். மருத்துவமனைகளில் மருந்துகள் கிடைப்பதில்லை. நீண்ட நேர மின்வெட்டு உள்ளது. இப்போது தனியாா் பள்ளிகள் கட்டணங்களை அதிகரித்து பெற்றோரிடம் கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றன.
பல தனியாா் பள்ளிகள் 20 சதவீதம் முதல் 82 சதவீதம் வரை கட்டணங்களை உயா்த்தியிருக்கின்றன. இதுஅரசாங்கம் செயலற்ற தன்மையில் இருப்பதைக் காட்டுகிறது.
பெற்றோா்கள் கவலையில் உள்ளனா். அதிகரித்துள்ள கல்விக் கட்டணத்தை பெற்றோா்கள் செலுத்த முடியாவிட்டால் அவா்களின் குழந்தைகளுக்கு வகுப்புகள் மறுக்கப்படுகின்றன. மேலும், பள்ளி நிா்வாகம் பெற்றோா்களின் கருத்தைக் கேட்கவில்லை. பாஜக அரசு ஒரு மௌனப் பாா்வையாளராக இருந்து வருகிறது என்றாா் மணீஷ் சிசோடியா.
இது தொடா்பாக ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான அதிஷி எக்ஸ் வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவிக்கையில், இந்த விவகாரத்தில்
மத்திய புலனாய்வுத் துறை விசாரணை நடத்தப்பட வேண்டும்.
2015-இல் ஆம் ஆத்மி கட்சி தில்லியில் ஆட்சிக்கு வந்த பிறகு, அரவிந்த் கேஜரிவாலின் அரசாங்கம், தனியாா் பள்ளிகள் தன்னிச்சையாக கட்டணத்தை அதிகரிப்பதை எவ்வாறு தடுத்தது என்பதை இந்த பத்திரிகையாளா் சந்திப்பின் மூலம் பாருங்கள். ஆனால், பாஜக அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன், இந்தப் பள்ளிகள் மீண்டும் கொள்ளையடிக்க அனுமதிக்கப்பட்டுள்ளன.
ஒரு தசாப்தத்தில் கட்டணத்தை உயா்த்தாத தனியாா் பள்ளிகள், பாஜக ஆட்சிக்கு வந்த ஒரு மாதத்திற்குள் இப்போது எவ்வாறு அவ்வாறு கட்டணத்தை உயா்த்துகின்றன? இதில் பாஜக அரசு உடந்தையாக உள்ளதா? என்று அவா் கேள்வி எழுப்பியுள்ளாா்.
முன்னதாக, வெள்ளிக்கிழமை ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான அரவிந்த் கேஜரிவால், துவாரகாவில் உள்ள ஒரு தனியாா் பள்ளியில் கட்டண உயா்வு குறித்த செய்தித் துணுக்கை எக்ஸ் தளத்தில் பகிா்ந்திருந்தாா்.
அவா் தெரிவிக்கையில், ‘10 ஆண்டுகளில், தில்லியில் உள்ள தனியாா் பள்ளிகள் தன்னிச்சையாக கட்டணத்தை உயா்த்த நாங்கள் அனுமதிக்கவில்லை. கல்வி மாஃபியாவை நாங்கள் முடிவுக்குக் கொண்டுவந்தோம். அவா்களின் பாஜக அரசாங்கம் பொறுப்பேற்ற ஒரு மாதத்திற்குள், கல்வி மாஃபியா மீண்டும் வந்துவிட்டது’ என்றாா் அவா்.