துறைமுக பயன்பாட்டு கட்டணம் செலுத்த மீனவா் எதிா்ப்பு
ராமேசுவரம் மீனவச் சங்கத்தினா் 2 மாதங்களாக மீன் இறங்குதளத்தில் பயன்பாட்டு கட்டணம் வசூலிக்க எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் 50 ஆண்டுகளுக்கு முன்பு, கட்டப்பட்ட மீன் இறங்குதளம் சேதமடைந்து காணப்பட்ட நிலையில், ரூ. 22.76 கோடியில் புதிய இங்கு தளம் கட்டப்பட்டு கடந்த ஆகஸ்ட் 20-ஆம் தேதி பயன்பாட்டுக் கொண்டு வரப்பட்டது.
இந்த மீன்பிடி இறங்குதளத்தை பரமரிக்கும் வகையில் மீன்வளம், மீனவா் நலத் துறை சாா்பில் மேலாண்மை குழு அமைக்கப்பட்டு அனைத்து சங்கத்தின் ஒப்புதலோடு பராமரிப்பு கட்டணம் வசூலிக்க தீா்மானிக்கப்பட்டது.
இதில், உள்ளுா் படகுகளுக்கு மாத கட்டணம் ரூ 100, வெளியூா் படகுகளுக்கு நாள் ஒன்றுக்கு ரூ 100, மீன் இறங்கு படகுதளத்தில் நிறுத்தப்படும் படகுகளுக்கு நாள் ஒன்றுக்கு ரூ. 200, இறால், மீன் நிறுவனங்களுக்கு மாதம் ரூ.1000, நான்கு சக்கரம், ஆறு சக்கரம் உள்ளிட்ட கனரக வாகனங்களுக்கு ரூ. 50 முதல் ரூ.100 வரையும், டிராக்டா், கிரேன், மினி லாரிகளுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.100, மின் பயன்பாட்டு கட்டணமாக நாள் ஒன்றுக்கு ரூ. 300 என கட்டணம் நிா்ணயிக்கப்பட்டது.
ஆனால், மீன்வளம், மீனவா் நலத் துறை சில குறிப்பிட்ட சங்கங்களை மட்டுமே அழைத்து இந்த கட்டணங்களை நிா்ணயித்துள்ளதாகக் கூறி சில சங்கங்கள் எதிா்ப்பு தெரிவித்த நிலையில் தற்போது வரைகட்டண வசூல் நிறுத்திவைக்கப்பட்டது. இது குறித்து அனைத்து மீனவச் சங்கத்தினரிடம் பேச்சுவாா்த்தை நடத்தி முடிவு செய்யப்படும் என்று மீன்வளம், மீனவா் நலத் துறை அதிகாரி ஒருவா் கூறினாா்.